நடிகர் கமல்ஹாசனுக்கு பெரிய அறிமுகங்கள் தேவையில்லை. ஏனெனில் , தமிழ் சினிமாவின் அடையாளங்களில் அவர் முதன்மையானவர். எம்ஜிஆர், சிவாஜியை போன்று, நடிப்பு உலகில், நிறைய சாதனைகளை செய்தவர். தமிழ் சினிமாவை அடுத்தடுத்த கட்டங்களுக்கு கொண்டு சென்றவர். நடி்ப்பு ரீதியாக, தொழில்நுட்ப ரீதியாக, கதை, திரைக்கதை, இசை ரீதியான என பல விஷயங்களில் அவர் தமிழ் சினிமா வேற லெவலுக்கு மாற்றியவர்.
சினிமாவும், தனது வாழ்க்கையும் வெவ்வேறானது இல்லை என்ற நிலையில் வயது, 70 களை தொடும் நிலையிலும், எறும்பு போல சுறுசுறுப்பாக எப்போதும் இயங்கிக் கொண்டிருப்பவர். இந்தியன் 2 படப்பிடிப்பு, அரசியல் பயணங்கள், பிக்பாஸ் நிகழ்ச்சி ஏற்பாடு என இவ்வளவு பிஸியிலும், சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் நடந்த விழா ஒன்றில் பங்கேற்றார். அப்போது, தற்கொலை குறித்து கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு பதிலளித்து கமல் பேசியதாவது,
பெயிலியர் ஆகாத படங்களை எடுப்பது எப்படி என்று கேட்பதுபோல் தான் என்னிடம் இந்த கேள்வி. ஆனால், நான் அந்த படங்களையும் எடுத்திருக்கிறேன். 20,21 வயதில் எனக்கும் இந்த எண்ணம் வந்திருக்கிறது. நான் எவ்வளவு பெரிய கெட்டிக்காரன், என்னை இந்த சினிமா உலகம் மதிக்கவில்லையே என்ற கோபம் வந்தது. அப்போது, நான் தற்கொலை செய்து கொண்டால், எவ்வளவு நல்ல நடிகனை இழந்துவிட்டோம் என்று எல்லோரும் நினைப்பார்களே, என்ற மமதை ஏற்பட்டது.
இந்த விஷயத்தை அனந்து என்ற எனது நண்பரிடம் விவாதித்தேன். அவர் என்னை திட்டி, நான் உன்னை விட ஜீனியஸ்தான். ஆனால், என்னை இப்போதும் யாருக்குமே தெரியாது. நம் வேலையை செய்வோம். கண்டிப்பாக அதற்கான பலன் கிடைக்கும். அதற்கான காலம் வரும்வரை பொறுத்திருக்க வேண்டும் என்று கூறினார்.
தற்கொலை செய்துக்கொள்ள ஆசைப்பட்டியாமே என, இதுபற்றி ஒருமுறை நடிகர் சோ என்னிடம் கேட்டார். ஆமாம் என்றேன். பிறந்த பச்சிளங்குழந்தையை, கழுத்தை நெரித்துக் கொன்று விடுவாயா எனக் கேட்டார். அய்யோ, யாரோ ஒருவருடைய குழந்தையை நான் எப்படி கொல்வேன் என்று பதட்டப்பட்டேன். அப்புறம், எப்படி உங்க அப்பா குழந்தையை நீ கொல்லத் துணிந்தாய் என்று என்னை கேட்டார். அீப்போதுதான் தற்கொலை மிக தவறான எண்ணம் என புரிந்தது.
தற்கொலை என்பது ஒரு குற்றச் செயல். வாழ்க்கையில் இருட்டும், வெளிச்சமும் மாறி மாறி தான் வரும். இருட்டாகவே இருக்கிறதே என்பதற்காக பயப்படக் கூடாது. வெளிச்சம் வரும்வரை பொறுமையாக இருப்பதுதான் இங்கு முக்கியம். பொறுமை இல்லாவிட்டால், யாருக்கும் பயனின்றி போய் விடுவோம். அப்போது, கலாம் சொன்னதை போல, கனவு காண வேண்டும். அந்த கனவு, உங்களை தூங்க விடாமல் செய்யும் கனவுகளாக, கலாம் சொன்னதை போலவே இருக்க வேண்டும்.
மரணம் என்பது ஒருநாள் நிச்சயம் வரும். நாமே, அதை வலியப் போய் வரவழைக்க கூடாது. வாழ்க்கையும், மரணமும் வேறு வேறு அல்ல. வாழ்க்கையின் ஒரு பகுதி மரணம் என நினைப்பவன் நான். ஒரு வாக்கியத்துக்கு முற்றுப்புள்ளி போல, ஒரு பேச்சுக்கு, கவிதைக்கு முற்றுப்புள்ளி போல மரணம் இருப்பதே மனித வாழ்க்கையை சிறப்பாக்கும், என்று பேசி இருக்கிறார் கமல்.





