சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைப்பது என்பது குதிரை கொம்பான ஒரு விஷயம்தான். சினிமா சாராத ஒரு தனிநபர், சினிமா பின்புலம் இல்லாத ஒருவர் சினிமாவில் அவ்வளவு எளிதாக நுழைந்து விட முடியாது. ஆனால் அதே நேரத்தில் சில படங்களில் நடித்து ஜெயித்து பிரபலமாகி விட்டால் அதற்கு பிறகு கேரக்டர்களை கவனமாக தேர்வு செய்து நடிக்க வேண்டும்.
நடிகர் தனுஷ் நடிகை நயன்தாரா நடித்த படம் யாரடி நீ மோகினி. இந்த படத்தில் போலீஸ் கான்ஸ்டபிள் கேரக்டரில் நடிகர் கருணாஸ் நடித்திருப்பார். இந்த படத்தில் அவருக்கு காட்சிகள் மிக குறைவுதான். ஆனால் ஒரு டெலிபோன் பூத் காட்சியில் நயன்தாராவுடன் பேசும் காட்சியில் கருணாஸ் காமெடியில் அசத்தியிருப்பார்.
இதுகுறித்து சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் கருணாஸ் கூறியதாவது, முதலில் யாரடி நீ மோகினி படத்தில் நடிக்க மாட்டேன் என்று மறுத்து விட்டேன். அந்த படத்தில் என்னுடைய கேரக்டர் அவ்வளவாக எடுபடாது என்பதால் அந்த கேரக்டர் பிடிக்காமல் தான் நடிக்க மறுத்து விட்டேன்.
அதற்கு பிறகு அந்த படத்தின் தெலுங்கு வெர்ஷனில் டெலிபோன் பூத்தில் சுனில் பேசும் கேரக்டரை பார்த்தேன். அப்படி ஒரு கேரக்டரில் நடிக்க அப்புறம்தான் தோன்றியது. படத்தில் நயன்தாரா இருக்கிறார். தனுஷ் இருக்கிறார். மற்ற ஆர்ட்டிஸ்ட்டுகளும் இருக்கின்றனர்.
ஆனாலும் இந்த ஒரு காட்சியில் நடித்து கைதட்டல் வாங்கி விட முடியாதா? தனுஷ் நயன்தாரா தாண்டி இந்த ஒரு காட்சியில் நாம் சிறப்பாக நடித்து பெயர் வாங்க முடியாதா? உன்னால் அது முடியாதா? என்று என்னை நானே கேட்டுக்கொண்டு தான் அந்த காட்சியில் நான் நடித்தேன்.
நமக்குள்ள அப்படி ஒரு கேள்வியை கேட்டுட்டு தான் அடுத்த நாள் அந்த படத்தில் நான் நடித்தேன். அந்த ஒரு சின்ன முயற்சி யாருக்காவது இருந்தாலும் இருக்கணும். ரஜினி சார் இதுவரைக்கும் நடிச்சிட்டு இருக்கிறார். இன்னும் ஜனங்க பார்க்கறாங்க இல்லே. இந்த உறுதிதான் அதுக்கு காரணம் என்று நடிகர் கருணாஸ் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.





