தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆக இருந்தவர் மணிகண்டன். பிறகு ஸ்கிரிப் ரைட்டர் உதவி இயக்குனராக பல படங்களில் பணிபுரிந்தார். மேலும் அவர் மிமிக்ரி கலைஞர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒரு கட்டத்தில் சினிமாவில் அறிமுகமான மணிகண்டன் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்தார்.
காதலும் கடந்து போகும் ஏலே நெற்றிக்கண் ஜெய்பீம் காலா போன்ற படங்களில் நடித்த அவர் பிறகு குட்நைட் படத்தில் கதையின் நாயகனாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றார். தொடர்ந்து லவ்வர் குடும்பஸ்தன் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் அதிக கவனம் பெற்ற ஒரு வளரும் இளம் நடிகராக மாறியிருக்கிறார்.
குடும்பஸ்தன் படம் கடந்தாண்டு துவக்கத்தில் வெளியான நிலையில் இப்போது ஓராண்டு கடந்தும் மணிகண்டன் நடித்த எந்த படமும் திரைக்கு வரவில்லை. ஆனால் அவர் ஏற்கனவே 4 படங்களில் நடித்து வருவதாகவும் 2 புதுமுக இயக்குனர்கள் படங்களில் நடிக்க கமிட் ஆகி ப்ரீ புரடக்சன்ஸ் பணிகள் நடந்து வருவதாகவும் கோலிவுட்டில் தகவல் வெளியானது.
ஆனால் மணிகண்டன் படம் அடுத்தடுத்து திரைக்கு வரும் என்று காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. இந்நிலையில் நடிகர் மணிகண்டன் இப்போது புதிய படம் ஒன்றில் நடிக்க கமிட் ஆகியிருக்கிறார். இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கும் ஒரு படத்தில் மணிகண்டன் நாயகனாக நடிக்கிறார்.
குடும்பஸ்தன் படத்தை சினிமாக்காரன் புரடக்சன்ஸ் என்ற நிறுவனம் சார்பில் எஸ் வினோத்குமார் என்பவர் தயாரித்துள்ளார். மீண்டும் தங்களது நிறுவனத்தின் தயாரிப்பில் நடிகர் மணிகண்டனை அவர்கள் கேட்டு வந்த நிலையில் இப்போது தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் மணிகண்டன் நடிக்கும் படத்தை அந்த நிறுவனம்தான் தயாரிக்க கமிட் ஆகியுள்ளது.
இதுவரை நடிகர் மணிகண்டன் நடித்த படங்கள் அனைத்துமே சின்ன பட்ஜெட் படங்கள்தான். 5 கோடி ரூபாய் முதல் 6 கோடி ரூபாய்க்கும் குறைவான முதலீட்டில் உருவான படங்களில் தான் அவர் நடித்தார். ஆனால் இந்த படம் ரூ. 40 கோடி பட்ஜெட்டில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாகிறது. மணிகண்டன் நடிக்கும் முதல் பெரிய பட்ஜெட் படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.





