கடந்த 1980 – 90களில் பல வெற்றி படங்களில் நடித்தவர் நடிகர் முரளி. அவர் நடித்த படங்களில் இதயம் படம் பிளாக்பஸ்டர் படமாக பெரிய வெற்றி பெற்றது. இன்றும் சொல்லப்படாத காதலுக்கு உதாரணமாக சொல்லப்பட்டு வருகிற ஒரு படமாக இதயம் உள்ளது. கிராமத்திலிருந்து டாக்டருக்கு படிக்க வருகிற முரளிக்கு அவருடன் படிக்கிற ஹீரா மீது காதல் ஏற்படுகிறது.
ஆனால் கிராமத்து பண்புக்கு உரிய வெட்கம் தயக்கம் அவருக்கு இருப்பதால் ஹீரா அவரது காதலை உணர்ந்து தன் காதலை சொல்லும் போது சொல்ல முடியாத ஒரு சூழல் ஏற்படுகிறது. இப்படி ஒரு காதலை சொன்ன படம் தான் இதயம். இந்த படம் வெளியாகி வெள்ளி விழா கொண்டாடியது.
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தில் டிசைனராக இருந்தவர் கதிர். அவருக்கு திரைப்பட இயக்குனராகும் எண்ணம் வந்த நிலையில் தனது ஆசையை அவர் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பாளர் தியாகராஜனிடம் தெரிவித்தார். அப்போது சரி ஒரு கதையை எழுதிக் கொண்டு வாங்க என்று அவரும் கூறிவிட்டார்.
இதயம் படத்தின் கதையை எழுதிவிட்டு அவரிடம் சொன்னபோது கதை பிரமாதமாக இருக்கிறது. ஆனால் இதில் புதுமுகங்கள் தான் நடிக்க வேண்டும் என்று அவர் கூறிவிட்டார். இயக்குனர் கதிர் பல ஆடிசன்கள் நடத்தி பல இடத்தில் தேடியும் ஹீரோ கிடைக்கவில்லை. கிராமத்து நாயகன் என்பதால் கருப்பாக இருக்க வேண்டும். பார்த்தவுடன் பிடிக்கிற முகமாக இருக்க வேண்டும். புன்னகையோடு வெட்கத்தை வெளிப்படுத்துகிற முகமாக இருக்க வேண்டும்.
இத்தனை அம்சங்கள் நிறைந்த ஹீரோ அப்போது கிடைக்கவில்லை. அப்போது காதிதி கிராஃப்ட் விளம்பரத்திற்கு போஸ் கொடுத்திருந்த ஹீராவை அணுகி நடிக்க கேட்டபோது அவரது குடும்பம் மறுத்துவிட்டது. படத்தில் காதல் இல்லை டூயட் இல்லை நாயகனும் நாயகியும் தொட்டுக்கொள்ள கூட மாட்டார்கள் என்று சொல்லி அந்த குடும்பத்தாரிடம் சம்மதம் வாங்கி வைத்திருந்தார் கதிர். கடைசிவரை இந்த படத்துக்கு ஹீரோ கிடைக்கவில்லை.
நேராக தயாரிப்பாளர் தியாகராஜனிடம் சென்று இந்த படத்துக்கு ஹீரோ கிடைக்கவில்லை சார். படத்தை விட்டு விடலாம். நான் வேறு ஒரு கதை எழுதி வருகிறேன் என்று கூறியிருக்கிறார். அப்போது தியாகராஜன், முரளின்னு ஒரு கன்னடத்துப் பையன் வந்திருக்கான். அவன் சரியா இருப்பான்னு நினைக்கிறேன். போய் பார்த்துட்டு வாங்க என்று அனுப்பி வைத்தார். முரளியை கண்டதுமே தனக்கான ஹீரோ இவர் தான் என்று கதிர் முடிவு செய்தார். கதையைக் கேட்ட முரளியும் உடனே சம்மதித்தார். இப்படிதான் இதயம் படம் உருவாகி உள்ளது.





