இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் உருவான படம் அங்காடித் தெரு. சென்னையில் உள்ள வணிக வளாகங்கள், பெரிய நிறுவன கடைகளில் நடக்கும் கொத்தடிமை தொழிலாளர் முறையை அப்படியே தோலுரித்து காட்டிய படமாக இந்த படம் இருந்தது. இதில் புதுமுக நடிகர் மகேஷ் நாயகனாகவும் அஞ்சலி நாயகியாகவும் நடித்திருந்தனர்.
மேலும் சினகா இயக்குனர் ஏ வெங்கடேஷ் பழ கருப்பையா பாண்டி இமான் அண்ணாச்சி உள்ளிட்டோரும் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர். கடந்த 2010ம் ஆண்டில் வெளியான இந்த படத்துக்கு விஜய் ஆண்டனி மற்றும் ஜீவி பிரகாஷ்குமார் இசையமைத்து இருந்தனர். இதில் நீ அப்படி ஒன்றும் அழகில்லை பாடல் பெரிய அளவில் டிரண்டிங் ஆனது.
இந்த படத்தில் நாயகன் நாயகி பணி செய்யும் ஜவுளி நிறுவனத்தின் உரிமையாளராக பழ கருப்பையா நடித்திருந்தார். இவரது நடிப்பு படத்தின் வெற்றிக்கு பெரிய பக்கபலமாக அமைந்தது. அவரது தூத்துக்குடி பாஷையும் அதை பேசிய விதமும் படத்தை வேற லெவலில் கொண்டு சென்றது.
அந்த படத்துக்கு பிறகு பழ கருப்பையா மேலும் சில படங்களில் நடித்தார். அதிலும் குறிப்பாக இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த சர்கார் படத்தில் முதலமைச்சர் கேரக்டரில் பழ கருப்பையா நடிப்பு அசத்தலாக இருந்தது. இவர் பல்வேறு அரசியல் கட்சிகளிலும் இருந்தவர் என்பதால் அவ்வப்போது அரசியல் சார்ந்த கருத்துகளை வெளிப்படையாக பேசுவார்.
நடிகர் விஜய் குறித்து சமீபத்தில் நடிகர் பழ கருப்பையா, நீலகிரியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, விஜயுடன் இணைந்துதான் கூட்டணி அமைக்க விரும்பினார். ஆனால் விஜய் மொத்த தொகுதிகளில் பாதி இடம் எங்களுக்கு பாதி இடம் உங்களுக்கு என சொல்லி விட்டார்.
மேலும் இரண்டரை ஆண்டுகள் நான் முதல்வர், இரண்டரை ஆண்டுகள் நீங்கள் முதல்வர் என்றும் கண்டிஷன் போட்டார். அதனால் வேறுவழியின்றி அதிமுக வெளியேறி விட்டது. பிறகு பாஜகவுடன் சேர்ந்து விட்டது. எப்போதுமே தேசிய கட்சியில் இருந்து அதிமுக விலகினால் மற்ற கட்சிகளை கூட்டுச் சேர்த்துக்கொள்ளும். முக்கிய கட்சிகளையும் உடன் இணைத்து கொள்ளும். ஆனால் மற்ற கட்சிகள் புதிதாக துவங்கிய கட்சியை தனித்து விட்டு விடும். இது நடிகர் விஜய்க்கு புரியவில்லை என்று நடிகர் பழ கருப்பையா கூறியிருக்கிறார்.





