மலையாள சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக இருப்பவர் பிருத்விராஜ். இப்போது இயக்குனராகவும் மாறி இருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு பிருத்விராஜ் இயக்கிய அவரது லூசிபர் படம் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் இப்போது அந்த படத்தின் 2ம் பாகமாக எல்2 எம்புரான் படத்தை அவர் டைரக்ட் செய்திருக்கிறார்.
இந்த படத்தில் நாயகனாக மலையாள நடிகர் மோகன்லால் நடித்திருக்கிறார். விரைவில் இந்த படம் திரைக்கு வர உள்ள நிலையில் படத்தின் பிரமோசன் பணிகளில் மோகன்லால் பிருத்விராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்று வருகின்றனர். முன்பதிவிலேயே இந்த படம் ரூ. 60 கோடி வரை வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது.
மலையாளத்தில் மட்டுமின்றி தமிழிலும் பிருத்விராஜ் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமான ஒரு நடிகராக இருக்கிறார். ஸ்ரீகாந்த் கோபிகா நடித்த கனா கண்டேன் படத்தில் வில்லனாக அறிமுகமானவர் பிருத்விராஜ். முதல் படத்திலேயே அழகான வில்லனாக நடிப்பில் அசத்தியிருந்தார். அவரது குரல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
தொடர்ந்து தமிழில் அவர் நடித்த மொழி கண்ணாமூச்சி ஏனடா இராவணன் அபியும் நானும் சத்தம் போடாதே உள்ளிட்ட பல படங்களில் அவரது நடிப்பு தனித்துவமாக இருந்தது. குறிப்பாக மொழி படத்தில் வாய் பேசாத நாயகி ஜோதிகாவை அவர் காதலிப்பதும் அவரது எதிர்ப்பால் தவிப்பதும் என நடிப்பில் அழுத்தம் காட்டியிருந்தார்.
கடந்தாண்டில் பிருத்விராஜ் நடிப்பில் வெளியான ஆடுஜீவிதம் படம் மலையாளத்தில் மட்டுமின்றி பிறமொழி ரசிகர்கள் மத்தியிலும் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. அதிலும் அவரது நடிப்பு ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப் போனது. இப்போது எம்புரான் படத்திலும் பிருத்விராஜ் மீதான எதிர்பார்ப்பு மேலும் பலமடங்கு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் நேர்காணலில் ஒன்றில் பேசிய நடிகர் பிருத்விராஜ் கூறியதாவது, சமூகத்தில் என்ன நடந்தாலும் சினிமாவை பார்த்து கெட்டுப் போய்விட்டார்கள் என்று சொல்கின்றனர். ஆனால் சினிமாவே சமூகத்தின் பிரதிபலிப்புதான் என்பதை மறந்துவிடக் கூடாது. சினிமா ஒரு கற்பனை என்றால் அது உருவாவது உங்களை சுற்றியுள்ள உலகத்தில் இருந்துதான் என்று கூறியிருக்கிறார்.





