நடனக்கலைஞராக தமிழ் சினிமாவுக்குள் வந்து நடன இயக்குனராக மாறி பிறகு நடிகராகவும் மாறியவர் ராகவா லாரன்ஸ். அவர் நடித்த முனி மற்றும் காஞ்சனா சீரிஸ் படங்கள் பிரமாண்ட வெற்றிகளை கொடுத்த நிலையில் இயக்குனர் தயாரிப்பாளராக மாறி கோடிகளில் சம்பளம் வாங்கும் முன்னணி நட்சத்திர நடிகராக இப்போது தமிழ் சினிமாவில் வலம் வருகிறார்.
கடந்த பல ஆண்டுகளாகவே ஏழை எளிய மக்களுக்கு வறுமையில் வாடும் மக்களுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கு பலவிதங்களில் உதவிகளை செய்து வருபவர் ராகவா லாரன்ஸ். பெற்ற தாய் மீது அளவற்ற அன்பும் ராகவேந்திரா சுவாமி மீது அளவற்ற பக்தியும் கொண்டுள்ள அவர் மாற்றம் என்ற சேவை அமைப்பையும் 2 ஆண்டுகளாக நடத்தி வருகிறார்.
இதற்கிடையே ஒருமுறை செய்தியாளர்களிடம் பேசிய ராகவா லாரன்ஸ்சிடம், இத்தனை விதமான உதவிகளை மக்களுக்கு தொடர்ந்து செய்கிறீர்களே? எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவீர்களா? என்று கேட்கப்பட்டது. அப்போது அரசியலுக்கு வந்துதான் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று இல்லை. இப்போதே என்னால் முடிந்த உதவிகளை செய்கிறேன். அதுவே எனக்கு சந்தோஷம்தான் என்று சொன்னார்.
ஆனால் சில வாரங்களுக்கு முன்பு திடீரென ஒரு வீடியோ வெளியிட்டு நான் அரசியலுக்கு வர போகிறேன் என்று அறிவித்தார். மேலும் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போகிறேன் என்று சொன்ன போதே நானும் அரசியலுக்கு வர விரும்பினேன் என்ற ஒரு உண்மையையும் போட்டு உடைத்தார். ஆனால் இன்று வெளியிட்ட ஒரு வீடியோவில் நான் திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை. மெதுவாக அரசியலுக்கு வருகிறேன் என்றும் கூறி திடீரென பின்வாங்கி விட்டார்.
இதற்கு காரணம் என்னவென்றால் நடிகர் விஜய் முதல்வர் ஆனதால் இவரும் தவெக கட்சியில் சேர்ந்து துணை முதல்வர் பதவி கேட்கலாம் என்கிற ஆசையில் இருந்திருக்கிறார். அதே நேரத்தில் தவெக தரப்பிலிருந்து குறிப்பாக தலைவர் விஜயே அழைப்பு கொடுத்து தன்னை கட்சியில் சேர்த்துக் கொள்வார் என்றும் லாரன்ஸ் விரும்பியிருக்கிறார். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. முதல்வர் விஜய் ராகவா லாரன்ஸை கண்டு கொள்ளவே இல்லை.
தவெக கட்சியில் இருந்து எந்தவித சிக்னலும் அவருக்கு கிடைக்கவில்லை. அதனால் வலியப் போனால் நமக்கு ஒரு சாதாரண பதவி கூட கிடைக்காது என்பதை புரிந்துக்கொண்ட ராகவா லாரன்ஸ் இப்போது அப்படியே பின்வாங்கி விட்டார் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். தமிழக வெற்றிக் கழகம் என்பது தலைவர் விஜயின் அடையாளமாக மட்டும்தான் இருக்க வேண்டும் ராகவா லாரன்ஸ் போன்ற நடிகர்கள் வந்து கட்சியில் தன்னை முன்னிலைப் படுத்திக் கொள்ள எப்போதுமே விஜய் அனுமதிக்க மாட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.





