தமிழ் சினிமாவில் நடன இயக்குனராக தனது வாழ்க்கையை துவங்கியவர் மாஸ்டர் ராகவா லாரன்ஸ். பல படங்களில் ஹீரோக்களை, ஹீரோயின்களை ஆடவிட்டு வேடிக்கை பார்த்தவர், அமர்க்களம் படத்தில் காலம் கலிகாலம் ஆகிப் போச்சுடா பாடல் காட்சியில் நடனமாடி, தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானார்.
தொடர்ந்து அற்புதம், ஸ்டைல், பார்த்தேன் ரசித்தேன் உள்ளிட்ட படங்களில் நடித்த ராகவா லாரன்ஸ், முனி படத்தில் ராஜ்கிரணுடன் இணைந்து நடித்து பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார். அந்த முனி படத்தின் தொடர்ச்சியாக தான் காஞ்சனா 2, காஞ்சனா 3 படங்களை தந்தார். இனி அடுத்ததாக காஞ்சனா 4 படம் விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ளது.
ராகவா லாரன்ஸ் சிறந்த நடன இயக்குனர், நல்ல நடிகர் என்பதை கடந்து, மற்றவர்களுக்கு உதவுவதில் அதிக ஆர்வம் கொண்டவர். ஆண்டுதோறும் தனது வருமானத்தில் பல கோடி ரூபாய்களை கஷ்டப்படும் மக்களுக்காக உதவி வருகிறார். குறிப்பாக மாற்றம் என்ற சேவை அமைப்பை உருவாக்கி, சமீபத்தில் ஏழை விவசாயிகளுக்கு பல கோடி ரூபாய் மதிப்பிலான 10 டிராக்டர்களை வழங்கினார்.
இப்படி மக்களுக்கு உதவி செய்வதால், மாஸ்டர் ராகவா லாரன்ஸ் மீது மக்களுக்கு மிகப்பெரிய அபிமானம் இருந்து வருகிறது. அதே நேரத்தில் அவரது நடிப்பில், தயாரிப்பில், இயக்கத்தில் வெளியாகும் படங்களும் ரசிக்கும்படியாக தான் இருக்கின்றன. ஓரிரு படங்கள் தவிர ராகவா லாரன்ஸ் படங்கள் மிகப்பெரிய வெற்றி படங்களாக இருந்து வருகின்றன. ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படமும் ராகவா லாரன்ஸ், எஸ்ஜே சூர்யா நடிப்பில் பெரிய வெற்றியை பெற்றது.
இந்நிலையில் நடிகர் தனுஷ் சொந்தமாக கதை எழுதி, இயக்குனராக உருவாக்கி உள்ள ராயன் படம் சமீபத்தில் வெளியானது. இந்த படம் குறித்து பலரும் தங்களது விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். படத்தில் வன்முறை காட்சிகள் அதிகம் என்ற பொதுவான குற்றச்சாட்டு இருந்தாலும், படத்தின் செகன்ட் ஆப் போரடிப்பதாக குறிப்பிட்டாலும், அரங்கு நிறைந்த காட்சிகளாக ராயனை ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்.
இதற்கிடையே நடிகர் ராகவா லாரன்ஸ் ராயன் படம் குறித்து, தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது, நேற்று ராயன் படம் பார்த்தேன். தனுஷ் இந்த படத்தில் நடித்து, இயக்கியும் உள்ளார். மேலும் நண்பர் எஸ்ஜே சூர்யா வித்யாசமான நடிப்பை இந்த படத்தில் வெளிப்படுத்தி உள்ளார். ராயன் படத்தில் இருக்கும் அனைவருமே நன்றாக நடித்துள்ளனர். படத்தில் ஏஆர் ரகுமான் சிறப்பாக இசை அமைத்துள்ளார். மேலும், சர்வதேச தரத்திலான இயக்குனர் கிடைத்துள்ளார். தனுஷின் 50வது படத்துக்கு வாழ்த்துகள் என அதில் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.





