கடந்த 3ம் தேதி இந்தியா முழுவதும் நீட் தேர்வு நடத்தப்பட்ட நிலையில் அதில் முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அன்று நடந்த நீட் தேர்வு மாணவர்களின் நலன் கருதி ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது நாடு முழுவதும் தேர்வு எழுதிய மாணவ மாணவியர் மத்தியில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக நீட் தேர்வுக்கு பெரும்பாலான மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் தமிழகத்திலும் அத்தகையே நிலையே உள்ளது. நீட் தேர்வு வேண்டாம் என்றும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசை தமிழக அரசியல் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில் கவிஞர் வைரமுத்து தனது முகநூல் பதிவில் கூறியிருப்பதாவது, தேர்வு என்பதே மாணவர்மீது நிகழ்த்தப்படும் மனக்கொலை. அதிலும் நீட் என்பது கல்வியின் பேரால் நிகழும் ஒரு கட்டாயக் குற்றம். 22லட்சம் மாணவர்களின் இதய ரோஜாக்கள் எரிக்கப்பட்டிருக்கின்றன.
இந்த நீட் தேர்வு வெற்றியை அல்ல, வியாபாரத்தை நோக்கியே கட்டமைக்கப்பட்டது. இந்தித் திணிப்பு எதிர்ப்பில் போலவே நீட் தேர்விலும் எண்ணிலடங்கா உயிர்கள் இழக்கப்பட்டுள்ளன. இந்தித் திணிப்புக்கு ஒரு நீதி? நீட் திணிப்புக்கு ஒரு நீதியா?
நீட் தேர்வு வெற்றியா தோல்வியா என்ற எதார்த்தத்தை விரும்பவில்லை; வாழ்வா சாவா என்ற பதற்றத்தையே விரும்புகிறது. லட்சக்கணக்கான குடும்பங்களை இந்த நீட் தேர்வு சாவுக்குப் பக்கத்தில் அழைத்துச் சென்று அடுத்த சாவுக்குத் தயாரிக்கிறது. நீட் தேர்வைக் கட்டமைத்த கல்வித் திட்டத்தை நான் எதிர்க்கிறேன்.
அதை மாநிலங்களின் விருப்பு வெறுப்புக்கே விட்டுவிட விழைகிறேன். வெடித்த தென்னம்பாளையில் தடித்த இடி விழுந்தமாதிரி எங்கள் கொழுந்துகள் மீது இந்தக் கொடுமை நிகழாதிருக்கட்டும். தேசம் திரண்டு தீவைக்க வேண்டும் நீதியில்லாத நீட்டுக்கு என்று தனது பதிவில் கவிஞர் வைரமுத்து ஆவேசமாக கூறியிருக்கிறார்.





