நடிகர் ராகவா லாரன்ஸ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். துவக்கத்தில் நடன இயக்குனராக தனது சினிமா பயணத்தை துவங்கிய அவர் இன்று நடிகராக, இயக்குனராக, தயாரிப்பாளராக பன்முகத்தன்மை கொண்டு தமிழ் சினிமாவில் டாப் லெவலில் இருந்து வருகிறார்.
அவரது படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வருகின்றன. சமீபத்தில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் மாஸ்டர் ராகவா லாரன்ஸ், நடிகர் எஸ்ஜே சூர்யா இணைந்து நடித்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் பெரிய அளவில் வெற்றி பெற்றது. இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ள கூலி படத்திலும் அவர் முக்கிய கேரக்டரில் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்தாலும், ஏழை எளிய மக்களுக்கு உதவுவதில், மாற்று திறனாளிகளுக்கு உதவுவதில், கஷ்டப்படுபவர்களுக்கு தேடிச் சென்று உதவுவதில் ராகவா லாரன்ஸ் அதிக ஆர்வம் கொண்டு இருக்கிறார். இதற்காக அவர் பல கோடிகளை ஒதுக்கி உதவிகளை செய்து வருகிறார். தன்னுடைய சொந்த பராமரிப்பில் ஆதரவற்றோர் இல்லம் நடத்தி குழந்தைகளை, மாற்றுத்திறனாளிகளை காப்பாற்றி வருகிறார்.
கனமழை, புயல் என எந்த மாநிலத்தில் பெரிய பாதிப்பு, சேதம் ஏற்பட்டாலும் கோடிக்கணக்கு நிவாரண நிதியை வாரி வழங்குபவர் நடிகர் ராகவா லாரன்ஸ். தொடர்ந்து மக்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் கொண்டிருக்கும் மாஸ்டர் ராகவா லாரன்ஸ், இப்போது மாற்றம் என்ற சேவை அமைப்பை தொடங்கி இருக்கிறார். மே ஒன்றில் அந்த அமைப்பை துவக்குவதாக அவர் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், இப்போது அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், விவசாயிகள் விவசாயத்துக்கு பயன்படுத்தும் பத்து புதிய டிராக்டர்கள், சிவப்பு நிறத்தில் வரிசையாக நிறுத்தப்பட்டுள்ளன. மாற்றம் என்ற அமைப்பின் மூலம் முதல் கட்டமாக இந்த பத்து டிராக்டர்களையும் ஏழை விவசாயிகளுக்கு ராகவா லாரன்ஸ் இலவசமாக வழங்குகிறார். அந்த வீடியோவில் பேசிய மாஸ்டர் ராகவா லாரன்ஸ், எல்லோருக்கும் வணக்கம். உழைப்பாளர் தின வாழ்த்துக்கள். சேவை என்கிற அறக்கட்டளை மூலம் மாற்றம் என்ற அமைப்பை துவங்கி இருக்கிறோம். இந்த மாற்றத்திற்கு உங்கள் அன்பும், ஆதரவும், ஆசீர்வாதமும் எங்களுக்கு தேவை.
எங்கெல்லாம் கஷ்டப்படுற ஏழை விவசாயிகள் இருக்கிறார்களோ, அவர்களை கிராமம் கிராமமாக நானே தேடிச் சென்று என் கையால் இந்த உதவியை வழங்க இருக்கிறேன். அதை செய்ய போகிறோம் இதை செய்யப் போகிறோம் என்று பேசிக் கொண்டு இருக்காமல், அதை செயலில் காட்ட விரும்புகிறோம். அதை பார்த்துவிட்டு நீங்கள் மாற்றமா, இல்லையா என்று கூறுங்கள். என்று பேசி, அந்த வீடியோவில் அமைப்பின் தொடர்பு எண்களையும் வெளியிட்டு இருக்கிறார்.
வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்; https://www.instagram.com/reel/C6agk56xvk1/?igsh=Yml6bGwzb2NoemE3





