நடிகர் விஷாலுக்கு அண்மை காலத்தில் வெளியான பல திரைப்படங்களும் தோல்வியிலேயே முடிவடைந்தன. 2017 ஆம் ஆண்டு துப்பறிவாளன் மற்றும் 2018 ஆம் ஆண்டு இரும்புத்திரை என அடுத்தடுத்து இரண்டு ஹிட் திரைப்படங்களை விஷால் கொடுத்தார். அதன்பிறகு அவர் தேர்வு செய்து நடித்த அத்தனை திரைப்படங்களும் படுதோல்வியை சந்திக்க ஆரம்பித்தன.
இதில் அவர் பெரிதும் எதிர்பார்த்த சண்டக்கோழி திரைப்படத்தின் இரண்டாம் பாகமும் விஷாலுக்கு கை கொடுக்கவில்லை. ஆரோக்யா, ஆக்சன், சக்ரா, வீரமே வாகை சூடும், லத்தி என விஷாலின் தோல்வி திரைப்படங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.
இதில் எனிமி திரைப்படம், விமர்சன ரீதியாக ஓரளவு வரவேற்பு பெற்றாலும் திரையரங்குகளில் கல்லா கட்டவில்லை. அவ்வளவுதான் விஷாலின் திரையுலக கரியர் முடிந்துவிட்டது என்று பலரும் கூறி வந்த நேரத்தில், நடிகருக்கு கை தூக்கி விட்டது மார்க் ஆண்டனி திரைப்படம். நிச்சயம் அந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெறும் என யாருமே எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், விஷால் மற்றும் எஸ்.ஜே சூர்யா நடிப்பில் டைம் டிராவலை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டது. மிகவும் சிக்கலான ஒரு கதைக்களத்தை முடிந்த அளவுக்கு எளிமையாக கூறியதால் ஆதிக் ரவிச்சந்திரன் இதில் பாராட்டப்பட்டார். அதேபோல் மொத்த கதையிலும் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கி கைத்தட்டலை பெற்றார் எஸ் ஜே சூர்யா.
சத்தமே இல்லாமல் மார்க் ஆண்டனி திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்த நிலையில், அடுத்ததாக விஷால் நடித்த ரத்னம் திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. இப்படியான சூழலில் துப்பறிவாளன் படத்தின் இரண்டாம் பாகத்தை எப்படியாவது எடுக்க வேண்டும் என்பதில் தீவிரம் காட்டி வருகிறார் விஷால். இதில் அவர்தான் இயக்குனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இது ஒரு பக்கம் இருக்க அவர் இயக்குனர் முத்தையாவுடன் இணைய போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் வெளியான மருது திரைப்படம் ஓரளவு வரவேற்பை பெற்றது. இதன் காரணமாக இவர்கள் மீண்டும் இணையலாம் என்று கூறப்படுகிறது. தற்போது முத்தையா தனது மகனை வைத்து திரைப்படம் இயக்கி வரும் சூழலில் அடுத்ததாக விஷாலுடன் இணையலாம் என்று திரைத்துறை வட்டாரத்தில் பேசப்படுகிறது.





