நடிகர் ரஜினிகாந்த் நின்றால், நடந்தால், தும்மினால் கூட அது செய்தியாகி விடும் அளவுக்கு அவர் மீதான ஊடகத்தின் கவனிப்பு பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. நாட்டில் எது நடந்தாலும் அதில் ரஜினிகாந்தின் கருத்து என்ன என்பதை அறிந்துக்கொள்வதில், மக்களுக்கு அதை சொல்வதில் ஊடகங்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றன. அதே போல் ரஜினி குறித்த லேட்டஸ்ட் அப்டேட்டுகளை தெரிந்துக்கொள்ள அவரது கோடிக்கணக்கான ரசிகர்களும் ஆர்வம் காட்டுவதையும் மறுக்க முடியாது.
இந்நிலையில், சமீபத்தில் மும்பையில் முகேஷ் அம்பானி மகன் ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சன்ட் திருமண விழா கோலாகலமாக நடைபெற்றது. மும்பையை விழாக்கோலம் பூண்டிருந்தது. பாரத பிரதமர் நரேந்திர மோடி முதல், உலகில் பெரிய பணக்காரர்கள், பாலிவுட், கோலிவுட், டோலிவுட் நட்சத்திரங்கள், கிரிக்கெட் நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள் பங்கேற்ற முக்கிய பிரமாண்ட திருமண விழாவாக இது இருந்தது.
இந்த திருமண விழாவுக்காக ரூ. 5 ஆயிரம் கோடி வரை செலவிடப்பட்டதாக புள்ளிவிவர கணக்குகள் கூறப்படுகி்னறன. திருமண விழாவில் பங்கேற்ற முக்கிய விஐபிகளுக்கு முகேஷ் அம்பானி தரப்பில் இருந்து, ரூ. 2 கோடி மதிப்புள்ள காஸ்ட்லி வாட்ச் கிப்ட் ஆக தரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாத்துறையைச் சேர்ந்த நடிகர்கள் ரஜினிகாந்த் – லதா ரஜினிகாந்த், இயக்குனர் அட்லி – பிரியா, நடிகர் சூர்யா – ஜோதிகா, இயக்குனர் விக்னேஷ் சிவன் – நயன்தாரா உள்ளிட்டோர் அம்பானி இல்ல திருமண விழாவில் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அம்பானி இல்ல திருமண விழாவில் பங்கேற்ற ரஜினிகாந்த், நடனம் ஆடியது மிகப்பெரிய அளவில் வைரலாகி, பேசு பொருளாகவும் மாறியது.
இதுகுறித்து சமீபத்தில் ஒரு விழா நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் பேரரசு கூறியதாவது, சூப்பர் ஸ்டார் என்றாலும் அவரும் ஒரு சாதாரண மனிதர்தான். அவருக்கும் ஒரு ஆதங்கம் இருக்கலாம். தன்னை சாதாரண மனிதனாக வெளிப்படுத்திக்கொள்ளவும் வாழவும் ஆசைப்படலாம். அம்பானி வீட்டு திருமணத்தில் அனைவரும் ஆடிய போது, அவரும் மகிழ்ச்சியாக ஆடினார். இதை ஏதோ தேசக்குற்றம் போல ரஜினி எப்படி ஆடலாம் என்று கேள்வி கேட்கின்றனர்.
ஒரு நடிகர் என்றால் எப்போதும் உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக்கொண்டு, கையில் முத்திரை வைத்துக்கொண்டுதான் இருக்க வேண்டுமா, சில இடங்களில் அவரையும் சராசரி மனிதராக வாழ விடுங்கள். இதை எல்லாம் விமர்சனம் செய்யாதீர்கள். நாட்டில் பல பிரச்னைகள் இருக்கிறது. ஆனால் அதைப்பற்றி எல்லாம் யாரும் பேச மாட்டார்கள் என்று, தனது ஆதங்கத்தை இயக்குனர் பேரரசு கோபமாக வெளிப்படுத்தி இருக்கிறார்.





