தமிழ் சினிமாவில் இரண்டு சகாப்தங்களாக இமயம் போல் உயர்ந்து நிற்பவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல்ஹாசன். இதில் 27 வயதில், அபூர்வ ராகங்கள் படம் மூலம் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தவர் ரஜினிகாந்த். ஆனால் 5 வயதிலேயே களத்தூர் கண்ணம்மா படம் மூலம், சினிமாவில் அறிமுகமானவர் கமல்ஹாசன்.
கமலுக்கும், ரஜினிக்கும் ஏறக்குறைய 4 வயதுகள்தான் வித்யாசம் என்ற நிலையில், இருவரும் சமகால கலைஞர்களாக தமிழ் சினிமாவில் கதாநாயகன்களாக வலம் வந்தனர். துவக்கத்தில் தொடர்ந்து பல படங்களில் ரஜினி, கமல் இருவரும் ஒன்றாக நடித்தனர். ஆனால் ஒரு கட்டத்தில் இருவரும் தனித்தனியாக படங்களில் நடித்தால்தான், தங்களது தனிப்பட்ட வளர்ச்சி இருக்கும் என்று அவர்களே முடிவு செய்து, ஹீரோக்களாக நடிக்க துவங்கினர்.
இந்த முடிவுக்கு பிறகு, ஏறக்குறைய 35 ஆண்டுகளுக்கு மேலாக ரஜினி, கமல் இருவரும் தனித்தனியாக தான் நடித்து வருகின்றனர். இதில் ரஜினி பட வெற்றி விழாவில் கமல் கலந்துக்கொண்டு ரஜினியை பாராட்டுவார். கமல் பட வெற்றி விழாவில், ரஜினி கலந்துக்கொண்டு கமலை பாராட்டுவார். அந்தளவுக்கு இருவரும் நெருங்கிய திரை நண்பர்களாக இன்றுவரை அதே நட்புடன் இருந்து வருகின்றனர்.
ஆனால் ரஜினி, கமல் ரசிகர்களை பொருத்தவரை, இருவரும் சேர்ந்து நடித்தால் நன்றாக இருக்குமே என்று ஆசைப்படுகின்றனர். ஏனெனில் 35 ஆணடுகளாக இரண்டு ஜாம்பவான்களும் சேர்ந்து ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை. கேமியோ ரோலில் கூட இதுவரை ரஜினி படத்தில் கமலோ, கமல் படத்தில் ரஜினியோ நடிக்கவில்லை.
இந்நிலையில் ஷங்கர் இயக்கிய சிவாஜி படத்தில் ரஜினிகாந்த் நடித்த போது, டைரக்டர் ஷங்கரிடம் இதுகுறித்து ரஜினியே நேரடியாக பேசியிருக்கிறார். நானும் கமலும் சேர்ந்து நடிச்சா எப்படி இருக்கும்? உங்களால் அப்படி ஒரு கதையை உருவாக்க முடியுமா? நான் கமல்கிட்ட பேசறேன், என்று கேட்டிருக்கிறார் ரஜினிகாந்த்.
அதற்கு பதிலளித்த இயக்குனர் ஷங்கர், நீங்களும் கமலும் இணைந்து இப்போது ஒரு படத்தில் நடிக்கிறீர்கள் என்றால், அந்த படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருக்கும். அவர்களது அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வது போல, அந்த படத்தின் கதை அமைய வேண்டும். அதே போல் அந்த கதை உங்கள் இருவருக்கும் பொருந்துவது போல இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் அது பெரிய வெற்றியாக இருக்கும் என்று கூறியிருக்கிறார். ஆனால் இதுவரை ரஜினி, கமல் இணைந்து நடப்பதற்கான சூழல் ஏற்படவில்லை என்பதும் இதில் கவனிக்கத்தக்கது.





