நடிகர் ரஜினிகாந்த் இப்போது தனது 171வது படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்துக்கு கூலி என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. அமீர்கான் நாகர்ஜூனா உபேந்திரா சத்யராஜ் ஸ்ருதிஹாசன் என முக்கிய நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
கூலி படத்தின் ஷூட்டிங் ஏறக்குறைய முடிவடையும் தருவாயில் உள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த மாத இறுதிக்குள் மொத்த படப்பிடிப்பும் முடிந்துவிடும் என்று கூறப்படுகிறது. இப்போது எண்ணூர் துறைமுகத்தில் முக்கிய காட்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அங்கு சத்யராஜ் உபேந்திரா ரஜினிகாந்த் போன்றவர்கள் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.
கூலி படத்தை முடித்துவிட்டு உடனே தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பில் ரஜினிகாந்த் கலந்துக்கொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இப்போது வேறுவிதமான ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ரசிகர்கள் எதிர்பார்த்தபடி ரஜினி கூலி படப்பிடிப்பை முடித்துவிட்டு உடனே அடுத்த படப்பிடிப்பில் பங்கேற்க போவதில்லை என்ற திடீர் முடிவை எடுத்திருக்கிறார்.
அதன்படி மார்ச் ஏப்ரல் மே ஆகிய 3 மாதங்களும் அவர் முழுநேர ஓய்வில் இருக்க திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. அந்த 3 மாதங்களும் அவர் போயஸ்கார்டன் வீட்டில் இருக்கப் போகிறாரா, அல்லது வெளியூர் வெளிநாடு அல்லது இமயமலை ஆசிரமங்களுக்கு செல்ல இருக்கிறாரா என்பது குறித்தும் சஸ்பென்ஸ் நீடிக்கிறது.
ஆனால் அதே நேரத்தில் இந்த 3 மாதங்களில் ரஜினிகாந்த் தன் வாழ்க்கை வரலாறு குறித்த சுயசரிதை எழுத திட்டமிட்டுள்ளதாக ஒரு முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. இப்போது 2025ம் ஆண்டு ரஜினியின் சினிமா பயணத்தில் 50வது ஆண்டு பொன்விழாவாக உள்ளது. இந்த ஆண்டில் அவரது பயோபிக் வெளியாவது ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
பாபா படத்தில் ரஜினி நடித்த போது அந்த படத்துக்கு பிரபல எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் கதை வசனம் எழுதியிருந்தார். அப்போதே அவரை வைத்து தனது சுயசரிதையை எழுத ஆரம்பித்த ரஜினிகாந்த், ஒரு வாரத்துக்கு பின் வேண்டாம் என அதை நிறுத்தி விட்டார். இப்போது மீண்டும் எழுத்தாளர் எஸ்ராவை வைத்து மீண்டும் தொடர போகிறாரா, அல்லது ரஜினியே தன் கைபட தன் வாழ்க்கை வரலாறை எழுத போகிறாரா என்பது விரைவில் வெளிச்சத்துக்கு வர உள்ளது.





