நடிகர் ரஜினிகாந்த் திரையில் வந்தால் ரசிகர்களுக்கு சந்தோஷம் கொப்பளிக்கும். தலைவா தலைவா என்று ஆர்ப்பரித்து கொண்டாடுவார்கள். இப்போதும் 75 வயதில் அவர் ஹீரோவாக நடித்துள்ள ஜெயிலர் 2 படம் திரைக்கு வரும் நாளை ஒரு தீபாவளி திருவிழாவாக கொண்டாட ரஜினி ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் ரஜினிகாந்த் உலகமே போற்றும் ஒரு உச்ச நட்சத்திர நடிகராக இருந்தாலும் அந்த புகழின் தாக்கம் தன்னை பாதிக்காத வகையில் மிகவும் எளிமையான ஒரு சாதாரண மனிதராக இருந்து வருகிறார். இது அவரது சுபாவமாகவே மாறியிருக்கிறது. சினிமாவில் ஸ்டைல் மாஸ் காட்டி அசத்தும் அவர் நிஜ வாழ்க்கையில் மிக எளிமையான மனிதராக காணப்படுவதே உண்மையாக உள்ளது.
சமீபத்தில் ஐதராபாத் ராஜிவ் காந்தி விமான நிலையத்தில் தன்னுடன் செல்ஃபி எடுக்க வந்த ஒரு ரசிகரை, தன்னுடன் வந்த பாதுகாவலர்கள் தடுத்து தள்ளி விட்ட போது, சட்டென்று நின்று ஒரு கணம் யோசித்த ரஜினிகாந்த், அடுத்த விநாடியே அந்த வாலிபரை தன்னருகே அழைத்து செல்ஃபிக்கு சிரித்தபடி போஸ் கொடுத்தார். இதுதான் அந்த உச்ச நட்சத்திர நடிகரின் யதார்த்தமாக உள்ளது.
ரஜினிகாந்த் ஒரு பஸ் கண்டக்டராக ஆரம்பத்தில் இருந்து இப்படி உச்சத்துக்கு வந்தவர் என்பதால் எப்போதுமே அவரது எண்ணம் யதார்த்தமான வாழ்க்கையில் இருக்கிறது. அதே நேரத்தில் அவரது ஆன்மீக ஈடுபாடும் அவரை சரியான பாதையில் பயணிக்க செய்கிறது. அதனால் அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் வாழ்க்கை சார்ந்த அவரது அனுபவங்கள், கருத்துகள் சார்ந்த அவரது பேச்சு பெரிய அளவில் வைரலாகி விடுகின்றன.
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மேடையில் பேசியதாவது, எனக்கு துன்பங்கள் கொடுக்கிற விஷயங்கள் ரெண்டு தான். மத்தவங்களோட நம்மை கம்ஃபேர் பண்ணிக்கிறது. அவன் மாதிரி நான் இருக்கணும். இவன் மாதிரி நான் இல்லே. அதில்தான் பொறாமை வயித்தெரிச்சல் பேராசை எல்லாமே வருது.
இன்னொண்ணு வந்து எப்பவுமே எதிர்காலத்தை பத்தி கவலைப்படறது. அய்யோ இப்படி ஆச்சுன்னா என்ன பண்றது? அப்படி ஆச்சுன்னா என்ன பண்றது? இந்த ரெண்டும்தான் மனுசனோட நிம்மதி சந்தோஷம் அழிவுக்கே காரணம் என்று அந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் பேசியிருக்கிறார்.





