சில வாரங்களுக்கு முன்பு ஏவிஎம் நிறுவன தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் உடல் மூப்பு காரணமாக மறைந்தார். அவரது படத்திறப்பு விழா சென்னை ஏவிஎம் பள்ளி வளாகத்தில் இன்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் நடிகர்கள் கமல்ஹாசன் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது, சரவணன் சார் எனக்கு தனிப்பட்ட முறையில் பல நன்மைகளை செய்திருக்கிறார். கோடம்பாக்கத்தில் எனக்கு ஒரு இடம் இருந்தது. அதை சும்மா விடக்கூடாது என்று சொல்லி அவரே பிளான் பண்ணி கொடுத்து கட்ட வைத்ததுதான் ராகவேந்திரா திருமண மண்டபம். அவர்தான் அதற்கு மூலகாரணமாக இருந்தார்.
போயஸ் கார்டனில் என் வீட்டுக்கு பக்கத்தில் நிறைய இடம் இருந்தது. நான் சினிமாக்காரன் என்பதால் அதற்கு 10 மடங்கு விலை சொன்னார்கள். அதனால் நான் சுவர் கட்டி வைத்திருந்தேன். என் வீட்டுக்கு ஒரு முறை வந்த சரவணன் சார் அந்த இடத்தை அதிக விலை என்றால் கூட வாங்கி விடுங்கள். மற்றவர்கள் வந்தால் பிரச்சனை. நீங்கள் வருத்தப்படுவீங்க என்றார். நான் அதைச் செய்தேன்.
சிவாஜி படத்துக்கு பிறகு ஆண்டுக்கு ஒரு படம் பண்ணுங்க. அது உடம்புக்கு மனசுக்கு நல்லது என்றார். அதை இப்பவும் கடைப்பிடிக்கிறேன். அவர் ரியல் ஜென்டில்மேன். அனைத்து அரசியல்வாதிகளிடமும் நட்பாக இருந்தார். எம்ஜிஆர் அவரை செரீப் ஆக்கினார். ஜெயலலிதாவுக்கும் சரவணன் மீது மரியாதை இருந்தது.
சிவாஜி படம் அரசியல்வாதிகளுக்கு எதிரான படம். ஆனால் கலைஞர் அந்த வெற்றி விழாவுக்கு வந்து விருது கொடுத்தார். அனைத்து அரசியல்வாதிகளிடமும் அன்பாக இருந்தார். அதெல்லாம் சரவணன் சாருருக்காக தான். இவ்வளவு வேலையை விட்டு முதல்வர் ஸ்டாலின் இங்கே வந்திருக்கிறார். தேர்தல் சமயத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மணித்துளியும் முக்கியம். ஆனால் முதல்வர் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறார். அது அவரது அன்பை காட்டுகிறது. சரவணன் எப்படி வாழ்ந்தார் என்பதை காட்டுகிறது.
அசையும் சொத்து அசையா சொத்து என்பார்கள். அசையா சொத்துக்கு விலை ஜாஸ்தி. நம் மீது அக்கறை கொண்டவர்கள் நம்மை விரும்புகிறவர்கள் அசையா சொத்து. கே பாலசந்தர் சோ பஞ்சு அருணாசலம் ஆர்எம் வீரப்பன் கலைஞர் சரவணன் என பலர் அப்படி இருந்தார்கள். நம் மீது அன்பு கொண்டவர்களை காலம் சீக்கிரம் கொண்டு போய் விடுகிறது. பேர் புகழ் குழந்தைகள் சொத்து எல்லாம் இருந்தாலும் நல்ல மனிதர்கள் போகும் போது அனாதையான பீஃல் வருகிறது. சரவணன் சார் கிரேட் என்று நடிகர் ரஜினிகாந்த் அந்த நிகழ்ச்சியில் பேசியது வைரலாகி வருகிறது.





