சின்னத்திரையில் அசத்தப் போவது யாரு கலக்கப் போவது யாரு போன்ற காமெடி நிகழ்ச்சிகள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ரோபோ சங்கர். பிறகு அவரது நடிப்பு திறமை, மிமிக்ரி ஆர்வம் காரணமாக சினிமா வாய்ப்புகள் தேடி வந்தது. தொடர்ந்து பல படங்களில் காமெடி ரோலில் நடித்து ரோபோ சங்கர் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
ரோபோ சங்கருக்கு பிரியங்கா என்ற மனைவியும் இந்திரஜா என்ற மகளும் உள்ளனர். பிகில் படத்தில் இந்திரஜா பாண்டியம்மா என்ற கேரக்டரில் நடித்திருந்தார். தர்மசக்கரம் படத்தில் துவங்கி மாரி இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா தேசிங்கு ராஜா புலி விஸ்வாசம் இரும்புத்திரை அண்ணாத்த உள்ளிட்ட பல படங்களில் ரோபோ சங்கர் நடித்திருக்கிறார்.
மதுரையைச் சேர்ந்த சங்கர் மேடை நிகழ்ச்சிகளில் ரோபோ வேடமிட்டு டான்ஸ் ஆடுவதில் பிரபலமானார். அதனால் தான் அவர் ரோபோ சங்கர் என அழைக்கப்பட்டார். நடிகர் கமல்ஹாசனின் மிக தீவிர ரசிகரான ரோபோ சங்கர் கதாநாயகனாக நடிக்க தயாராகி வந்தார். அவர் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கவும் கமிட் ஆகியிருந்தார்.
வரும் நவம்பரில் நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாளை விமரிசையாக கொண்டாடவும், அதற்காக தொடர்ச்சியாக நிகழ்ச்சிகள் நடத்தவும் அவர் திட்டமிட்டு இருந்தார். இந்நிலையில் காட்ஸ் ஜில்லா என்ற படத்தின் துவக்க விழா தளத்தில் திடீரென மயங்கி விழுந்த ரோபோ சங்கர், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சிறுநீரக பாதிப்பு உணவுக்குழாய் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் ரோபோ சங்கர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதற்கு முன்பு கடந்த 2023ம் ஆண்டு அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது. மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பெற்று அந்த நோயில் இருந்து மீண்டு வந்தார்.
அப்போது வெகுவாக உடல் எடை குறைந்த நிலையில் பிறகு அந்த நோய் பாதிப்பில் குணமாகி மீண்டும் திரைப்படங்களிலும் சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் ரோபோ சங்கர் பங்கேற்று வந்தார். ஆனால் மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டு அவர் மறைந்து விட்டார். வளசரவாக்கத்தில் அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ள நடிகர் ரோபோ சங்கர் உடலுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், நடிகர் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர் மேலும் நடிகர்கள் நடிககைள் இயக்குனர்கள் பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.





