தமிழ் சினிமாவில் மிகவும் கவனிக்கப்படும் நடிகராக இருந்து வருபவர் நடிகர் சரத்குமார். துவக்கத்தில் சினிமா தயாரிப்பாளராக தமிழ் சினிமாவுக்குள் வந்த சரத்குமார் கண் சிமிட்டும் நேரம் என்ற படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். 1988ம் ஆண்டில் வெளியான இந்த படத்தில் கார்த்திக் – அம்பிகா நடித்திருந்தனர்.
அதன்பிறகு கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரகுமான், ஆனந்தபாபு, சித்தாரா, ரேகா, ரகுவரன், குமரிமுத்து உள்ளிட்டோர் நடித்திருந்த புரியாத புதிர் படத்தில், சிஐடி போலீஸ் அதிகாரியாக சரத்குமார் நடித்திருந்தார். இந்த படங்களின் வெற்றியை தொடர்ந்து புலன் விசாரணை படத்தில் சரத்குமாரை வில்லனாக நடிக்க வைத்தார் கேப்டன் விஜயகாந்த். பிறகு ரசிகர்கள் மத்தியில் சரத்குமார் பிரபலமானார்.
தொடர்ந்து சேரன் பாண்டியன், நாட்டாமை, சூரிய வம்சம், நட்புக்காக, சமுத்திரம், சிம்மராசி என பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக சரத்குமார் மாறினார். தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவராக விஜயகாந்த் இருந்த போது, பொதுச் செயலாளராக சரத்குமார் இருந்தார். அதிமுக ஆதரவாளராக இருந்த சரத்குமார், 1996ம் ஆண்டில் சமத்துவ மக்கள் கட்சியை துவக்கி தலைவராக இருந்து வருகிறார்.
சினிமா, அரசியல் என இரண்டிலும் பிஸியாக இருந்துவரும் சரத்குமார் இப்போதும் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். மழை பிடிக்காத மனிதன் படத்தின் பிரமோவுக்காக நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற நடிகர் சரத்குமார், பல்வேறு விஷயங்களை ரசிகர்களுடன் பகிர்ந்துக் கொண்டார்.
அப்போது அவரிடம் ரஜினிகாந்த் நடிக்க வேண்டிய ஜக்குபாய் படத்தில் இருந்து அவர் வெளியேறி விட்டார். ஆனால் சரத்குமார் அந்த படத்தில் நடித்த நிலையில், அந்த படம் படுதோல்வி அடைந்தது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த நடிகர் சரத்குமார், ஜக்குபாய் எனக்கு ஒரு செட்பேக் படம்தான்.
அந்த படத்தின் தோல்விக்கு யார் காரணம் என்பது குறித்து நான் பேச விரும்பவில்லை. இந்த படத்தில் நடிக்க நான் ஓகே சொல்லி இருக்க கூடாது. அப்போதுதான் ஷங்கர் இயக்கிய சிவாஜி படத்தில், ரஜினிக்கு ஜோடியாக ஸ்ரேயா நடித்திருந்தார். உடனே ஜக்குபாய் படத்தில் எனக்கு மகளாக ஸ்ரேயா நடித்தால், அந்த படத்தை ரசிகர்கள் எப்படி ஏற்பார்கள். சூப்பர் ஸ்டார் யார் என்ற பஞ்சாயத்தே வேண்டாம். நடிகர்கள் மாறிக்கொண்டே இருப்பார்கள். யார் அதிகமாக ஹிட் கொடுக்கிறார்களோ, அவர்களை ரசிகர்களும், திரையுலகினரும் கொண்டாடுவார்கள் என்றும் அதில் கூறியிருக்கிறார் நடிகர் சரத்குமார்.





