தமிழ் சினிமாவில் கடந்த 1990களில் பல படங்களில் நடித்தவர் சரவணன். குறிப்பாக அபிராமி சந்தோசம் சூரியன் சந்திரன் தாய்மனசு உள்ளிட்ட பல படங்களில் சரவணன் ஹீரோவாக நடித்திருந்தார். அதன்பிறகு சில ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு இயக்குனர் அமீர் இயக்கத்தில் வெளியான பருத்திவீரன் படத்தில் நடிகர் கார்த்திக்கு சித்தப்பு கேரக்டரில் சரவணன் நடித்திருந்தார்.
பருத்திவீரன் படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் நடிகர் சரவணனுக்கு ரீ என்ட்ரியாக தொடர்ந்து தமிழில் பட வாய்ப்புகள் வந்தன. குறிப்பாக கோலமாவு கோகிலா ஜெயிலர் கடைக்குட்டி சிங்கம் ராயன் என பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் அவர் நடித்து வருகிறார். இதற்கிடையே ஒருமுறை விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக சரவணன் கலந்துக்கொண்டார்.
நடிகர் சரவணன் கடந்த 2003ம் ஆண்டில் சூர்யஸ்ரீ என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 2019ம் ஆண்டில் ஸ்ரீதேவி என்பவரை 2வது திருமணம் செய்து கொண்டார். முதல் மனைவி சூர்யஸ்ரீ சம்மதத்துடன் அவரது ஏற்பாட்டில்தான் இந்த 2வது திருமணம் நடந்ததாக தெரிய வந்துள்ளது.
முதல் மனைவி சூர்யஸ்ரீ மற்றும் 2வது மனைவி ஸ்ரீதேவியுடன் மாங்காடு அருகே உள்ள மவுலிவாக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 2 மனைவிகளுடன் குடும்பம் நடத்தி சரவணன் வசித்து வருகிறார். இந்நிலையில் அவரது முதல் மனைவி சூர்யஸ்ரீ நடிகர் சரவணன் மீது ஆவடியில் உள்ள காவல் ஆணையரகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அந்த புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது, நானும் நடிகர் சரவணனும் கடந்த 1996ம் ஆண்டு முதல் 2003ம் ஆண்டு வரை திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வாழ்ந்து வந்தோம். அதன்பிறகு 2003ம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டோம். நான் செய்த கஸ்டம்ஸ் ஏஜென்ஸ் ஹவுஸ் தொழிலில் வந்த வருமானத்தில் சரவணன் என்னுடன் வாழ்ந்து வந்தார்.
பல்வேறு கட்டங்களில் எனது கணவர் சரவணனுக்கு நிதியுதவி செய்திருக்கிறேன். ஆனால் இப்போது எனக்கு சாப்பாட்டுக்கு கூட அவர் பணம் கொடுப்பதில்லை. 2வது மனைவி ஸ்ரீதேவியுடன் சேர்ந்து கொண்டு என்னை அடித்து துன்புறுத்தி கொலை மிரட்டல் விடுகிறார். எனக்கு பராமரிப்பு தொகையாக 40 லட்சம் ரூபாய் தருவதாக கூறி ஏமாற்றி விட்டார். எனவே சரவணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகாரில் அவரது முதல் மனைவி சூர்ய ஸ்ரீ கூறியிருக்கிறார்.





