தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி பின்பு நடிகராக மாறியவர் சசிகுமார். இவருக்கு முதல் திரைப்படமாக அமைந்தது சுப்பிரமணியபுரம். தமிழ் சினிமா இதுவரை பார்த்திராத ஒரு கல்ட் கிளாஸ் திரைப்படத்தை அதன் வாயிலாக ரசிகர்களுக்கு கொடுத்திருந்தார் சசிகுமார்.
மதுரையை கதைக்களமாக கொண்டு இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருந்தது. காதல், நட்பு, துரோகம் என மூன்றையும் ஒருசேர காட்டி நம்மை ஆச்சரியப்படுத்தி இருந்தார் சசிகுமார். படத்தில் எந்த ஒரு காட்சிகளும் தேவையில்லாதது என்று சொல்லும் அளவுக்கு இல்லாமல் அனைத்தையும் கச்சிதமாக அதில் அவர் வடிவமைத்து இருந்தார்.
அதிலும் சுப்ரமணியபுரம் திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சி பலரது மனதையும் உலுக்கியது. இப்படி அந்த திரைப்படத்தில் சொல்லத் தகுந்த சாராம்சங்கள் நிறைய இருந்த சூழலில், பலராலும் சசிகுமார் கவனிக்கப்பட்டார். இதற்கு ஏற்றார் போல் அடுத்ததாக சமுத்திரக்கனி இயக்கத்தில், நாடோடிகள் திரைப்படத்தின் நடித்து பலரையும் திரும்பிப் பார்க்க வைத்தார்.
இதனைத் தொடர்ந்து ஈசன் என்னும் திரைப்படத்தை இயக்கி இருந்தார் சசிகுமார். படம் நன்றாக இருந்தாலும் அந்த நேரத்தில் பெரிய அளவு வரவேற்பை பெறவில்லை. இதனைத் தொடர்ந்து முழுக்க முழுக்க நடிகராகவே சசிகுமார் மாறிவிட்டார். இதில் அவருக்கு வெற்றியை விட தோல்வி படங்களே ஏராளமாக அமைந்தன. தற்போது டூரிஸ்ட் ஃபேமிலி என்னும் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் அது தொடர்பான பேட்டியில் பேசிய அவர், 2010 ஆம் ஆண்டு சமயம் ஒரு பெரிய வரலாற்று திரைப்படத்தின் கதையை வைத்திருந்தேன். அதனை சூர்யா மற்றும் விஜய்யிடம் கூறியிருந்தேன். ஆனால் அடுத்த கட்ட நகர்வுக்கு அது செல்லவில்லை. இன்றைக்கும் அந்த கதைக்கான ஹீரோ தேவைப்படுகிறார். பெரிய பட்ஜெட் என்பதால் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது.
தற்போது அதேபோல் மீண்டும் ஒரு பீரியட் படத்தை எடுக்க இருக்கிறேன். கிராமத்து சார்ந்த கதைக்களமாக அது உருவாகும். அதில் நானும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். பிரி ப்ரொடக்சன் பணிகள் தொடங்க இருக்கின்றன. அடுத்த ஆண்டு ஜனவரியில் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறி இருக்கிறார். இதைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் சசிகுமார் மீண்டும் இயக்குனர் ஆவதை எண்ணி மகிழ்ந்து வருகின்றனர்.





