நடிகர் சசிக்குமார், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒரு நடிகர். 2008ம் ஆண்டில், ஜூலை 4ம் தேதி வெளியான சுப்ரமணியபுரம் படத்தில் நடிகராக அறிமுகமான சசிக்குமார், அந்த படத்தை டைரக்ட் செய்ததும் அவர்தான். இந்த படத்தில் வில்லனாக சமுத்திரக்கனி நடித்திருப்பார். அடுத்து சமுத்திரக்கனி இயக்கிய நாடோடிகள் படத்தில் சசிக்குமார் ஹீரோவாக நடித்திருப்பார்.
சசிக்குமார், சமுத்திரக்கனி இருவருமே நெருங்கிய நண்பர்கள். அமீர் இயக்கிய பருத்திவீரன் படத்தில் இருவருமே உதவி இயக்குனர்களாக பணிசெய்தவர்கள், இருவருமே இயக்குனர்களாக, நடிகர்களாக தமிழ் சினிமாவில் வலம் வந்துக்கொண்டு இருக்கின்றனர். ஆனால் சமீப காலமாக சசிக்குமார் படங்கள் சரியாக போகவில்லை.
இந்த சூழலில், சூரி நடிப்பில் வெளியான கருடன் படத்தில் சசிக்குமார் நடிப்பு பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. சூரிக்கு நன்மை செய்ய தான் கருடன் படத்தில் நடிக்க சம்மதித்தேன். கதை கூட கேட்கவில்லை. கடைசியில் கருடன் படத்தில் நடித்தது எனக்கும் பெரிய நன்மையை தந்துக்கொண்டு இருக்கிறது, நிறைய பட வாய்ப்புகள் வருகிறது என்று சமீபத்தில் கூறியிருந்தார்.
சசிக்குமார் இயக்கி நடித்த முதல் படமான சுப்ரமணியபுரம், 2008ம் ஆண்டில் வெளியாகி மாபெரும் வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றது. மதுரை மக்களின் வாழ்வியலை கதைக்களமாக கொண்டிருந்தது. ஜேம்ஸ் வசந்தனின் இசையில் கண்கள் இரண்டால் பாடல், பட்டிதொட்டி எங்கும் டிரண்டிங் ஆனது. ஜெய் நடிப்பும் இதில் பேசப்பட்டது.
இந்நிலையில் சுப்ரமணியபுரம் படத்தின் 16ம் ஆண்டு நிறைவையொட்டி, படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் சசிக்குமார் தனது எக்ஸ் பக்கத்தில் சுப்ரமணியபுரம் படப்பிடிப்பில் எடுத்த புகைப்படத்துடன் ஒரு பதிவை போட்டுள்ளார். அதில், ஸ்வீட் சிக்ஸ்டீன் சுப்ரமணியபுரம். என்றுமே மறக்க முடியாத ஜூலை 4, இந்த படத்தை என்றுமே மறக்க முடியாத அளவுக்கு மாற்றிய அனைவருக்கும் நன்றி, என்றும் கூறியுள்ளார்.
இந்த பதிவுக்கு, தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்துகளை தெரிவித்துள்ள இயக்குனர் மற்றும் நடிகர் சேரன், வாழ்த்துகள் தம்பி, நம்ம சுப்ரமணியபுரம் 2ம் பாகம் எடுக்கலாமா… சீக்கிரம் வருகிறேன், என்று கூறியுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சசிக்குமார், சேரன் இணைந்து அவர்கள் காம்போவில் ஒரு படம் உருவானால் அது வேற லெவலில் இருக்கும், நிச்சயமாக இது நடக்கட்டும், நாங்கள் காத்திருக்கிறோம் என்று அந்த பதிவுக்கு பலரும் கமெண்டில் கருத்து கூறியுள்ளனர்.





