ஆரம்பத்தில் இயக்குனர்கள் பாலா அமீர் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணிசெய்தவர் சசிக்குமார். பிறகு அவரே கதாநாயகனாக நடித்து இயக்கிய முதல் படம் சுப்ரமணியபுரம். இந்த படம் மாபெரும் வெற்றியை பெற்றது. இந்த படத்தில் இயக்குனர் சமுத்திரக்கனி வில்லன் கேரக்டரில் நடித்திருந்தார்.
சுப்ரமணியபுரம் படத்தின் அபார வெற்றிக்கு பிறகு இயக்குனர் சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிக்குமார் நடித்த படம் நாடோடிகள். பெற்றோருக்கு பயந்து வீட்டை விட்டு ஓடிவரும் காதலர்களை சேர்த்து வைக்கும் நண்பர்களின் கதை இது. வித்யாசமான கதைக்களத்தில் இந்த படம் உருவாகி மாபெரும் வரவேற்பை பெற்றது.
அதன்பிறகு நடிகர் சசிக்குமார் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக மாறினார். சுந்தரபாண்டியன் புலிக்குட்டி கொடிவீரன் பேட்ட அயோத்தி போராளி ஈசன் பிரம்மன் என பல படங்களில் நடித்தார். அவரே தயாரிப்பாளராக சில படங்களை தயாரித்தார். இதில் பலத்த நஷ்டத்தையும் சந்தித்து ஒரு கட்டத்தில் பெரிய கடனாளியாகவும் ஆனார்.
நடிகர் சசிக்குமாரின் பல படங்கள் சரியாக போகாத நிலையில், சமீபத்தில் சசிக்குமார் சிம்ரன் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி படம் மிகப்பெரிய வரவேற்பை வெற்றியை பெற்றது. நடிகர் சசிக்குமாருக்கு கம்பேக் தந்தது. ரூ. 15 கோடியில் உருவான இந்த படம் 91 கோடி ரூபாய்க்கு மேல் வசூலில் சாதனை படைத்தது. அடுத்தாக ப்ரீடம் என்ற சசிக்குமார் நடித்த அடுத்த படம் விரைவில் வெளியாக உள்ளது.
இந்நிலையில் பிரமோ நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் சசிக்குமார் கூறியதாவது, மணிரத்னம் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த தளபதி படத்தில் ஒரு காட்சியில் ரத்தம் கொடுத்து விட்டு பணம் கொடுக்கும் போது அவர்கள் நன்றி சொல்வார்கள். அப்போது ரஜினி வெறும் பணம் தானே என்று சொல்லுவார். இதுபோன்று பலர் சொல்வதைக் கேட்டு நானும் பணத்தை மதிக்காமல் தான் இருந்தேன்.
அதனால்தான் கடந்த 40 ஆண்டுகளாக அந்த பணம் என்னை மதிக்காமல் இருந்தது. ஆனால் இப்போது பணத்தைப் பற்றி புரிந்து கொண்டேன். அதை மதிக்கவும் தெரிந்து கொண்டேன். இப்படி நான் மதிக்க தொடங்கிய பிறகுதான் இப்போது பணமும் என்னை மதிக்க தொடங்கி இருக்கிறது என்று நடிகர் சசிக்குமார் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.





