தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி பின் ஹீரோவாக பல வெற்றிப் படங்களில் நடித்தவர் நடிகர் சத்யராஜ். இப்போது குணச்சித்திர நடிகராக பல படங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக மிஸ்டர் பாரத் படத்துக்கு பிறகு 38 ஆண்டுகள் கழித்து நடிகர் ரஜினியுடன் கூலி படத்தில் சத்யராஜ் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.
நடிகர் சத்யராஜ், கோயம்புத்தூர் பாப்பநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்தவர். ஆரம்பத்தில் மிகுந்த கடவுள் பக்தி கொண்டவராக பழனி, திருப்பதி சென்றாலே முடி காணிக்கை தருவதை வழக்கமாக கொண்டிருந்தார். ஆனால் இயக்குனர் மணிவண்ணன், வேலு பிரபாகரன் போன்ற நாத்திகவாதி நண்பர்களுடன் பழகிய பிறகு, நெருக்கமான நண்பர்களாக மாறிய பிறகு கடவுள் மறுப்பாளராக மாறிவிட்டார்.
ஒரு கட்டத்தில் பெரியார் கொள்கைளை பின்பற்ற துவங்கிய நடிகர் சத்யராஜ், பொது மேடைகளிலும் அரசியல் மேடைகளிலும் தனது படங்களிலும் பெரியார் குறித்து பெருமிதமாக பேசி வருகிறார். நடிகர் விஜய் தனது கட்சியின் கொள்கைத் தலைவராக பெரியாரை கொண்டிருப்பதால், அந்த கட்சியில் கொள்கை பரப்புச் செயலாளர் பதவி தந்தால் சேர்ந்துக்கொள்வேன் என்றும் வெளிப்படையாக கூறியிருந்தார்.
சமீபத்தில் சந்தோஷமான வாழ்க்கை குறித்து நடிகர் சத்யராஜ் கூறியதாவது, மத்தவங்க நம்மை பத்தி என்ன நினைக்கிறாங்கன்னு நாம கவலைப்படக் கூடாது. அதே மாதிரி மத்தவங்க இப்படி தான் இருக்கணுமுன்னு நாமும் எதிர்பார்க்க கூடாது. அதாவது உலகத்தை பத்தி நீயும் கவலைப்படாதே, உன்னை பத்தி உலகம் என்ன நெனைக்குமுன்னு அதையும் நினைக்காதே, ஜாலியாக வானத்துல சிறகடிச்சு பறக்க வேண்டியதுதான்.
நிறைய மனிதர்களிடம் மன விலங்குகள் இருக்கிறது. இது அவர்களே அவர்களுக்காக போட்டுக்கொண்டதுதான். இதுதான், இப்படிதான் என்று கையில் விலங்குகளை போட்டுக் கொள்வதை போல, மனதுக்கும் சில விஷயங்களை விலங்காக போட்டுக்கொள்கின்றனர். என்னிடம் அப்படி எந்த மன விலங்குகளும் இல்லாததால் சந்தோஷமாக இருக்கிறேன்.
ஒரு பெரியாரிஸ்ட்டா இருந்தா வாழ்க்கை ரொம்ப ஈசியாக இருக்கும். பெரியார் கொள்கைகளை பின்பற்றி நடக்கிற எங்களுக்கு நல்ல நேரம், கெட்ட நேரம், ராகு காலம், எமகண்டம், நல்ல நம்பிக்கை, கெட்ட நம்பிக்கை, நோன்பு என்று எதுவுமே கிடையாது. நாங்கள் சுதந்திர பறவை. இந்த நேரத்துல எது நல்லது எது கெட்டதுன்னு நம்ம அறிவுக்கு படுதோ அதை சரின்னு செஞ்சிட்டு போயிட்டே இருப்போம் என்று நடிகர் சத்யராஜ் கூறியிருக்கிறார்.





