தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ராம்சரண். மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் மகன். ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் இவரது சித்தப்பா என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிப்பில் கேம் சேஞ்சர் படம் கடந்தாண்டில் வெளியானது. ஆர்ஆர்ஆர் படத்தில் ராம்சரண் ஜூனியர் என்டிஆருடன் இணைந்து நடித்திருந்தார்.
நடிகர் ராம்சரண் நடித்த பெத்தி படம் வருகிற ஜூன் மாதம் 4ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக இந்த படம் ரிலீஸ் ஆகிறது. இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ள பெத்தி திரைப்படத்தில் ராம்சரண் மற்றும் ஜான்வி கபூர் இணைந்து நடித்துள்ளனர்.
மேலும் கன்னட நடிகர் சிவராஜ்குமார் திவ்யேந்து ஜெகபதி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சமீபத்தில் நடந்த பெத்தி படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் கலந்துக்கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, இயக்குனர் புச்சி பாபு சனா என்னிடம் பெத்தி படத்தின் கதையை சொன்னபோது அதன் கதைக்களம் மிகவும் எனக்கு பிடித்துப் போனது.
அதனால் உடனடியாக அந்த படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்தேன். ஆனால் அதற்குப் பிறகு எனக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல வேண்டிய சூழலும் ஏற்பட்டது. அதனால் பெத்தி படத்தின் படப்பிடிப்பு தாமதமாகும் என்பதால் எனது கதாபாத்திரத்திற்கு வேறு நடிகரை தேர்வு செய்து கொள்ளுமாறு படக்குழுவிடம் நான் கூறினேன்.
ஆனால் படத்தின் ஹீரோ நடிகர் ராம்சரண் மற்றும் இயக்குனர் புச்சி பாபு சனா இருவரும் அதற்கு சம்மதிக்கவில்லை. நான் சொன்னதை அவர்கள் கேட்காமல் மறுத்து விட்டனர். அவர்கள் இருவரும் இந்த கதாபாத்திரத்தில் நீங்கள் மட்டும்தான் நடிக்க வேண்டும் என்று உறுதியாக கூறிவிட்டனர்.
நான் அமெரிக்காவிலிருந்து சிகிச்சை முடிந்து திரும்பும் வரை பொறுமையாக காத்திருந்தனர். என்னால் படப்பிடிப்பு தாமதம் ஆனாலும் அவர்கள் என் மீது வைத்த நம்பிக்கையை மாற்றவில்லை. ராம் சரணும் இயக்குனர் புச்சி பாபுவும் எனக்காக நீண்ட காலம் அன்போடு காத்திருந்தனர். அவர்களின் இந்த மனித நேயத்திற்கு நான் வாழ்நாள் முழுவதும் கடன்பட்டிருப்பேன் என்று நடிகர் சிவராஜ்குமார் நெகிழ்ச்சியாக கூறியிருக்கிறார்.





