தாய் மண் திரையகம் படத் தயாரிப்பு நிறுவனர் ராஜேஸ்வரி வேந்தன் தயாரிப்பாளர் சங்கத்தில் கடந்த 13 ஆண்டுகளாக உறுப்பினராக உள்ளார். கடந்த 2023 – 26 தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிட்டுள்ளார். கடந்தாண்டு இவர் தயாரிப்பாளர் சங்கத்தில் பொதுக்குழு நடத்தவில்லை என்றும் 2023 – 25 வரை ஆண்டறிக்கைகளை சமர்ப்பிக்கவில்லை என்றும் பதிவுத்துறை தலைவர் மற்றும் மாவட்ட பதிவாளரிடம் கடந்தாண்டு ஜூலை மாதம் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து பதிவுத்துறை சார்பில் தயாரிப்பாளர் சங்கத்துக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இந்த நிலையில் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் பற்றி அவதூறாக பேசியதாக கூறி ராஜேஸ்வரியை கடந்த செப்டம்பர் மாதம் முதல் 3 மாதங்களுக்கு தற்காலிகமாக சங்கத்திலிருந்து நீக்கியுள்ளனர்.
இதை எதிர்த்து சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் ராஜேஸ்வரி வழக்கு தொடுத்தார். இதையடுத்து சங்க விதிகளின்படி ராஜேஸ்வரியை தற்காலிக நீக்கம் செய்யப்பட்டதாக அதில் மாற்றப்பட்டது. தன் மீதான நடவடிக்கையை கைவிடும்படி சங்க செயற்குழுவுக்கு கடந்த ஆண்டு நவம்பர் 28ம் தேதி ராஜேஸ்வரி மன்னிப்பு கடிதம் எழுதியுள்ளார். மேலும் நேரிலும் சென்று மன்னிப்பு கேட்டுள்ளார்.
ஆனாலும் ராஜேஸ்வரி சங்கத்திலிருந்து நீக்க நிர்வாகிகள் நடவடிக்கை எடுத்தனர். சங்க நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன் கதிரேசன் ஆகியோர் தன்னை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு பல பேர் முன்னிலையில் மன்னிப்பு கேட்க வைத்தனர் என்று கூறி ஆயிரம் விளக்கு போலீஸ் ஸ்டேஷனில் ராஜேஸ்வரி புகார் அளித்தார். அதன்படி தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து தயாரிப்பாளர் ராஜேஸ்வரி கூறியதாவது, சங்கத்தில் கேள்வி கேட்டதற்காக ராதாகிருஷ்ணனும் கதிரேசனும் என் மீது தவறான குற்றங்களை சாட்டி சங்கத்திலிருந்து நீக்கினர். அவர்கள் சொன்னபடி பலர் முன்னிலையில் மன்னிப்பும் கேட்டேன். ஆனால் சங்கத்திலிருந்து நீக்கியதுடன் வரும் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்றும் கூறியுள்ளனர்.
மேலும் சில தயாரிப்பாளர்களிடம் கூறி அவர்களும் என்னை தகாத வார்த்தையால் திட்டி வருகின்றனர். போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் மகளிர் ஆணையத்திலும் புகார் அளித்தேன். இதை ஏற்ற மகளிர் ஆணையம் காவல்துறைக்கு உத்தரவிட்ட நிலையில் தற்போது ராதாகிருஷ்ணன் மற்றும் கதிரேசன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தயாரிப்பாளர் சங்கத்தில் நடக்கும் முறைகேடுகள் விரைவில் வெளிச்சத்திற்கு வர வேண்டும் என்று ராஜேஸ்வரி கூறினார்.





