நடிகர் விஜயகாந்த் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு மதுரையில் இருந்து சென்னைக்கு வந்த போது அவருடன் வந்தவர் இப்ராகிம் ராவுத்தார். சிறுவயதில் இருந்தே இருவரும் நெருங்கிய நண்பர்கள். விஜயகாந்த் நடிகராக உருவாகவும் அவர் முன்னணி நட்சத்திர நடிகராக மாறுவதற்கும் பக்கபலமாக இருந்தவர் இப்ராகிம் ராவுத்தர்தான்.
ஒரு காலகட்டத்தில் விஜயகாந்துக்கு அவர் அப்போது வாங்கிய சம்பளத்தை விட 4 மடங்கு அதிக சம்பளம் தந்து வில்லனாக நடிக்க ஒரு தயாரிப்பாளர் அழைத்த போது விஜயகாந்த் உடனே ஒப்புக்கொண்டார். ஆனால் இப்ராகிம் ராவுத்தர் மறுத்து விட்டார். நீ ஹீரோவாக தான் நடிக்க வேண்டும். வில்லனாக நடித்தால் மிக விரைவில் காணாமல் போய்விடுவாய் என்று வழிநடத்தியவர்.
விஜயகாந்துக்கு திருமணம் ஆகிற வரை அவர் நடித்த படங்களின் கதைகளை கேட்டு ஓகே செய்தவர் இப்ராகிம் ராவுத்தர்தான். இப்ராகிம் ராவுத்தர் பிலிம்ஸ் சொந்தமாக தயாரிப்பு நிறுவனமும் நடத்தி விஜயகாந்த் நடித்த பல படங்களை அவர்தான் சொந்தமாக தயாரித்தார். நட்புக்கு இலக்கணமாக இருந்தவர்கள் தான் கேப்டனும் ராவுத்தரும் என்பது தமிழ் சினிமா பார்த்த உண்மை.
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குனர் ஆர்கே செல்வமணி கூறியதாவது, ஷீட்டிங் ஸ்பாட்டில் விஜயகாந்த் காலில் ஆணி குத்தி வெளியே வந்துடுச்சு. அவர் வலியால் துடிக்கிறார். எல்லோரும் ஹாஸ்பிடல் போலாம் என்று சொல்றாங்க. ஆனா என்னோட கவலை என்னன்னா, எனக்கு இப்போது அவரை வைத்து ஒரு சீன் எடுத்தாகணும்.
ஏன்னா இப்போ எடுக்காமல் விட்டால் மறுபடி 5 ஜெனரேட்டர் விளக்கு எல்லாம் மறுபடி நாளைக்கும் செட் பண்ணி சீன் எடுக்கணும். அவ்வளவு செலவு பண்ணி என்னால அந்த ஒரு ஷாட்டை எடுக்க முடியாது. அதனால் சார் ஒரு ஷாட் எடுத்துட்டு ஹாஸ்பிடல் போலாமான்னு விஜயகாந்த் சார்கிட்ட கேட்டேன்.
பக்கத்துல இருந்த இப்ராகிம் ராவுத்தார், டேய் மனுஷனாடா நீ என்று சத்தம் போட்டார்.
விஜயகாந்தை கண் இமை மாதிரி அவர் பாதுகாப்பார். அவ்வளவு நட்பு. உடனே விஜயகாந்த் சார், டேய் இருடா என்று ராவுத்தரிடம் சொல்லிட்டு என்கிட்ட எவ்வளவு நேரம் ஆகும்ன்னு கேட்டார். நான் ஒரே ஒரு ஷாட் தான் என்று சொன்னேன். அந்த ஒரு ஷாட்டை நடிச்சு முடிச்சிட்டு தான் விஜயகாந்த் ஹாஸ்பிடல் போனார் என்று ஆர்கே செல்வமணி அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.





