தமிழ் சினிமாவில் ஹீரோக்களை காட்டிலும் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தும் துணை நடிகர்கள் பலர் இருக்கின்றனர். குறிப்பாக டெல்லி கணேஷ் ஜெய்கணேஷ் மேஜர் சுந்தர்ராஜன் தேங்காய் சீனிவாசன் எம்எஸ் பாஸ்கர் இளவரசு கேகே சௌந்தர் விகே ராமசாமி கேஏ அசோகன் மலேசியா வாசுதேவன் தியாகு சந்திரசேகர் அருள்தாஸ் பாலசரவணன் என பலரை குறிப்பிட்டுச் சொல்லலாம்.
அந்த வரிசையில் நடிகர் சிங்கம்புலி மிக அற்புதமான ஒரு நடிகராக தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்து வருகிறார். உதாரணமாக மாயாண்டி குடும்பத்தார் முத்துக்கு முத்தாக மனம் கொத்திப் பறவை படங்களில் காமெடி நடிப்பில் ரசிகர்களை கவர்ந்தார். நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் படத்தில் போலீஸ் கேரக்டரில் குணச்சித்திர நடிப்பை தந்திருந்தார்.
மேலும் மகாராஜா படத்தில் வில்லன் நடிப்பில் சிங்கம்புலி மிரட்டியிருந்தார். எப்படிப்பட்ட கேரக்டர் என்றாலும் அதில் தனது அழுத்தமான சிறந்த நடிப்பை அவர் தந்து வருகிறார். சமீபத்தில் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்ற படம் தாய்கிழவி. இந்த படத்தில் கமல்ஹாசன் ரசிகராக உப்பிலியப்பன் கேரக்டரில் அவரது நடிப்பு பெரிய வரவேற்பை பெற்றது.
இந்த படத்தில் தாய்கிழவியாக நடித்த பவுனுத்தாயி ராதிகாவுக்கு 3 மகன்கள் ஒரு மகள். அதில் மூத்த மகன்தான் சிங்கம்புலி. அடுத்து அருள்தாஸ் பாலசரவணன் இருவரும் மகன்கள். மகள் வீட்டில் வாழாவெட்டியாக மகனுடன் இருப்பார். ராதிகாவின் மருமகன்தான் ஜவஹர்லால் நேரு கேரக்டரில் நடித்த நடிகர் முத்துக்குமார். இவரது நடிப்பு பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.
சமீபத்தில் தாய்கிழவி படத்தின் விழா ஒன்றில் பேசிய நடிகர் சிங்கம்புலி கூறியதாவது, தாய்கிழவி படத்தில் ராதிகாவின் மூத்த மகனாக நடிக்க வேண்டும் என்று என்னிடம் சொன்னார்கள். நான் மகனாக செய்வது அவங்களுக்கு ஓகேவான்னு அவங்ககிட்ட கேளுங்க என்று சொன்னேன்.
ஏனென்றால் நமக்கு முடியில்லாத வழுக்கை தலை. இது எங்கே போய் முடியுதுன்னே தெரியாது. அதனால் அவங்க எனக்கு மகனா, அதுவும் மூத்த மகனா என்று ராதிகா கேட்டுடுவாங்களோ என்று நான் பயந்துக் கொண்டே இருந்தேன். ஆனா அதெல்லாம் அவங்க எதுவும் பேசலே. அதுமாதிரி ஒண்ணும் கேட்கலே. அவங்க நடிப்பில் மட்டும்தான் கவனமாக இருந்தாங்க என்று நடிகர் சிங்கம்புலி வெளிப்படையாக பேசியிருக்கிறார்.





