தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருப்பவர் மணிகண்டன். இயக்குனர் தசெ ஞானவேல் இயக்கிய ஜெய்பீம் படம் மணிகண்டனுக்கு மிகப்பெரிய வரவேற்பை அங்கீகாரத்தை பெற்றுத் தந்த நிலையில் அடுத்து குட்நைட் லவ்வர் படங்களை தொடர்ந்து அவரது நடிப்பில் வெளியான குடும்பஸ்தன் படம் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.
கடந்த ஜனவரி மாதம் 24ம் தேதி தியேட்டர்களில் வெளியான குடும்பஸ்தன் படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய ஆதரவை பெற்றது. சின்ன பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் ரூ. 35 கோடிக்கு மேல் வசூலித்தது. இந்த படத்தில் நடிகர் மணிகண்டனுடன் ஆர் சுந்தர்ராஜன் பிரசன்னா பாலச்சந்திரன் பாலாஜி சக்திவேல் ஜென்சன் திவாகர் குரு சோமசுந்தரம் போன்றவர்கள் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர்.
கொங்கு தமிழ் மக்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் கோவையை கதைக்களமாக கொண்ட பள்ளி கல்லூரி மாணவ மாணவியர் பெற்றோர், நண்பர்கள் என குடும்ப கதை கான்செப்ட்டுகளில் வீடியோ வெளியிட்டு மாபெரும் வரவேற்பை பெற்ற நக்கலைட்ஸ் யூடியூப். அதன் இயக்குனர் ராஜேஷ்வர் காளிசாமிதான் இந்த குடும்பஸ்தன் படம் மூலமாக இயக்குனராக அறிமுகமாகி இருந்தார்.
குடும்பஸ்தன் படத்தில் நடித்த பெரும்பாலான நடிகர் நடிகைகள் நக்கலைட்ஸ் குரூப் வீடியோக்களில் பலமுறை நடித்தவர்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. மணிகண்டன் ஆர் சுந்தர்ராஜன் குரு சோமசுந்தரம் பாலாஜி சக்திவேல் போன்ற சிலர் மட்டுமே சினிமா துறை சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் இந்த படம் பெரிய அளவில் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.
நடுத்தர குடும்பத்தை சேர்ந்த ஒரு இளைஞன், திருமணமான நிலையில் திடீரென வேலையை இழந்தால் அவன் பொருளாதார ரீதியாக சந்திக்கும் பிரச்னைகள், குடும்ப உறவுகளில் ஏற்படும் சிக்கல்கள், அதனால் கடன் துன்பங்களில் சிக்கும் அவன் எதிர்கொள்ளும் பிரச்னைகளே இந்த படத்தின் கதைக்களமாக இருந்து ரசிகர்களின் மனங்களை வென்றுவிட்டது.
இந்நிலையில், கடந்த 7ம் தேதி ஜீ 5 ஓடிடி தளத்தில் குடும்பஸ்தன் படம் வெளியானது. இந்த படம் ரிலீஸான நான்கு நாட்களிலேயே 50 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. தியேட்டரில் படம் பார்த்தவர்களே திரும்ப திரும்ப குடும்பத்துடன் ஓடிடி தளத்தில் வெளியான குடும்பஸ்தன் படத்தை பார்த்து பார்த்து ரசித்து வருகின்றனர். மேலும் தியேட்டரில் படத்தை பார்க்க தவற விட்டவர்களும் அதிகளவில் பார்ப்பதால் கணிசமான பார்வையாளர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.





