தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். மிக குறுகிய காலத்தில் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வளர்ச்சியை கண்டவர். இப்போது அவரது நடிப்பில் அமரன் என்ற படம் வெளியாக உள்ளது. வரும் தீபாவளிக்கு அந்த படம் ரிலீஸ் ஆகிறது.
நடிகர் கமல்ஹாசனின் சொந்த தயாரிப்பு நிறுவனமாக ராஜ்கமல் பிலிம்ஸ் அமரன் படத்தை தயாரித்துள்ளது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இந்த படத்தை டைரக்ட் செய்துள்ளார். சாய்பல்லவி நாயகியாக நடித்துள்ள இந்த படத்தில், மறைந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் கேரக்டரில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார்.
நடிகர் விஜய் இப்போது அரசியலுக்கு சென்றுவிட்டதால் அவருக்கு பிறகு நடிகர் சிவகார்த்திகேயன்தான் அந்த இடத்துக்கு வரப் போகிறார் என்ற பேச்சு பரவலாக தமிழ் சினிமாவில் இருந்து வருகிறது. அதற்கேற்ப சமீபத்தில் வெளியான தி கோட் படத்திலும், கேமியோ ரோலில் நடித்த சிவகார்த்திகேயனிடம், விஜய் பேசும் காட்சி அமைந்திருந்தது.
அதில் விஜய் முக்கிய வேலையாக செல்வதால், இந்த வேலையை என்னை பார்த்துக்கொள்ள சொல்லிவி்ட்டார் என்று கூறுவார், கதைப்படி வில்லன் மோகனை விஜய் பார்த்துக் கொள்ளும்படி கூறினாலும், அது உண்மையில் நான் அரசியலுக்கு செல்வதால், என் இடத்தில் சினிமாவை பார்த்துக்கொள் என்று கூறுவதாக விமர்சனம் எழுந்தது.
இந்நிலையில், திருச்சியில் நடந்த அமரன் பட பிரமோ நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் சிவகார்த்திகேயனிடம் தி கோட் படத்தில் நடித்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பேசிய சிவகார்த்திகேயன், தி கோட் படத்தில் அப்படி ஒரு காட்சியில் நடித்த எனக்கு ரொம்பவும் சந்தோஷமான ஒரு விஷயம், அதற்காக நான் விஜய்க்கும், இயக்குனர் வெங்கட் பிரபுவுக்கும் நன்றி சொல்லிக்கொள்கிறேன் என்று தெரிவித்தார். அப்போது கூட்டத்தில் குறுக்கிட்ட சிலர், நீங்கள் அடுத்த தளபதியா என்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த சிவகார்த்திகேயன், ஒரே தளபதிதான், ஒரே தல தான், ஒரே உலக நாயகன்தான், ஒரே சூப்பர் ஸ்டார்தான். அடுத்த என்பதற்கெல்லாம் வாய்ப்பே கிடையாது. அவங்க சினிமா எல்லாம் பார்த்துதான் நான் சினிமாவுக்கு வந்திருக்கேன். அவங்களை மாதிரி ஏதாவது படங்கள் பண்ணி, பெரிய ஹிட் கொடுத்து அவங்களை மாதிரி ஜெயிக்கணுமுன்னு நினைக்கலாம். ஆனா அவங்களாகவே ஆக்ணுமுன்னு நினைக்கிறது சரி கிடையாது, அது தப்பு என்று பேசியிருக்கிறார். இது இப்போது வைரலாகி வருகிறது.





