தமிழ் சினிமாவில் தற்போது முழு நேர கதாநாயகனாக மாறிவிட்டார் சூரி. கதையை தேர்ந்தெடுத்து நடிப்பதிலும், அதில் தனது சிறப்பான பங்களிப்பை கொடுப்பதிலும் அவர் ஆர்வம் காட்டி வருகிறார். விடுதலை என்னும் திரைப்படத்திலேயே அவர் தனது சிறப்பான நடிப்பை வெளிகாட்டி விட்டார்.
காவலராக குமரேசன் கதாபாத்திரத்தில் நடித்த அவர், ஒவ்வொரு காட்சியிலும் அந்த ரோலை உணர்ந்து நடித்திருப்பார். விடுதலை படத்தின் முதல் பாகத்தில் முழுக்க முழுக்க சூரிக்கே முக்கியத்துவம் கொடுத்து படத்தை எடுத்திருந்தார் வெற்றிமாறன். இந்த ஒரு திரைப்படமே சூரியை அடுத்தடுத்த கட்டங்களுக்கு இழுத்துச் சென்றது.
அங்கிருந்து கருடன் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த சூரி. இந்தப் படத்தை தயாரித்து அதற்கான கதையையும் கொடுத்தது வெற்றிமாறன். துரை செந்தில்குமார் இயக்கிய இந்த திரைப்படத்தில் சசிகுமார் உள்ளிட்டோர் நடித்தனர். ஜூன் மாதம் வெளியான இந்த திரைப்படம், வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.
அதில் சூரி நடிப்பும் பாராட்டத்தக்க வகையில் அமைந்தது. தனது இரண்டாவது திரைப்படத்தில் பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டை கொடுத்தார் சூரி. தற்போது அவரது நடிப்பில் உருவாகி இருக்கும் கொட்டுக்காளி திரைப்படம் வரும் 23ஆம் தேதி வெளியாகிறது. கூழாங்கல் என்னும் திரைப்படத்தைக் கொடுத்து விருது மேல் விருது வாங்கிய இயக்குனர் பி எஸ் வினோத்குமார் தான் இந்த திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்.
மலையாள நடிகை அன்னா பென் நடித்திருக்கும் இந்தத் திரைப்படம், இப்போதே பல்வேறு சர்வதேச விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகளை அள்ளி வருகிறது. சிவகார்த்திகேயன் தான் இந்த திரைப்படத்தை தயாரித்திருக்கிறார். இதில் சூரிக்கு மிக வித்தியாசமான கதாபாத்திரம் என்று கூறப்படுகிறது. கிராமத்துப் பின்னணியை மையமாகக் கொண்டு இந்த திரைப்படம் எடுக்கப்பட்டதாகவும் தெரிகிறது.
இந்த நிலையில் படம் குறித்து பேசி இருக்கும் சூரி, பாகுபலி திரைப்படம் என்றால் ஒரு கண்ணோட்டத்தோடு வருவீர்கள். அதுவே அவதார் திரைப்படம் என்றால் ஒரு கண்ணோட்டத்தோடு வருவீர்கள். அதேபோல கொட்டுக்காளி திரைப்படம் இப்படி தான் இருக்கும் என்ற நினைப்போடு வாருங்கள். நிச்சயம் இந்த திரைப்படம் உங்களை திருப்திப்படுத்தும். படத்தின் உள்ளே பயணிப்பதற்கு ஒரு பத்து நிமிடங்கள் வேண்டுமானால் எடுத்துக் கொள்ளலாம். நமக்கு முன்னே இருக்கும் கதையைத்தான் கூறியிருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.





