தமிழ் சினிமாவில் சில ஆண்டுகளுக்கு மீ டூ என்ற பாலியல் புகார்கள் பெரிய விஸ்வரூபம் எடுத்தது. இதில் பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டு கூறியது பெரிய அளவில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபோல் மற்ற சில நடிகைககளும் இயக்குனர்கள், நடிகர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை தெரிவித்தது அதிர்வலைகளை உண்டு பண்ணியது.
இந்நிலையில் சில ஆண்டுகளாக மலையாள சினிமாவிலும் இதுபோன்ற பாலியல் துன்புறுத்தல்கள் அதிகரித்து வருவதாக எழுந்த புகார்களை அடுத்து, கடந்த 2017ம் ஆண்டில் ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த ஹேமா கமிஷன், சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் பூகம்பம் கிளம்பியது.
அந்த அறிக்கையில் கூறியபடி, மலையாள சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்டு வரும் புதுமுக நடிகைகள் பாலியல் அழுத்தங்களுக்கு ஆளாகின்றனர். படங்களில் நடிக்க நடிகைகளிடம் பிரபல இயக்குனர்கள், நடிகர்கள் பாலியல் துன்புறுத்தல் செய்கின்றனர் என்பதை உறுதிப்படுத்தி இருந்தனர். இது மிகப்பெரிய அளவில் கேரளா சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த விவகாரத்தில் மலையாள நடிகர்கள் சங்கம் (அம்மா) மீதும் சர்ச்சையும், விமர்சனங்களும் எழுந்த நிலையில் சங்கத்தின் தலைவராக இருந்த நடிகர் மோகன்லால் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரைத் தொடர்ந்து 16 பேர் கொண்ட நிர்வாக கமிட்டியும் ராஜினாமா செய்த நிலையில், அம்மா சங்கமே கலைக்கப்பட்டு விட்டது.
இந்நிலையில் பிரபல மலையாள நடிகர், மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபியிடம், செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு ஆவேசமாக பதிலளித்த நடிகர் சுரேஷ் கோபி, ஹேமா கமிஷன் அறிக்கை மூலம் ஊடகங்களுக்கு இப்போது தீனி கிடைத்துள்ளது. ஆனால் ஒரு விஷயத்தை நினைவில் கொள்ள வேண்டும். திட்டமிட்டு சினிமா என்ற மிகப்பெரிய இயக்கத்தை அழிக்க முயற்சி நடக்கிறது.
நடிகைகள் அளித்துள்ள பாலியல் புகார்களுக்கு ஆதாரங்கள் என்ன, புகார்கள் இப்போது குற்றச்சாட்டு வடிவில் உள்ளன. குற்றவாளிகள் யார் என்பதை கோர்ட்தான் முடிவு செய்யும். நான் தனிப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்க வந்துள்ளேன். மலையாள நடிகர் சங்க அலுவலகத்தில் இருந்து நான் வரும்போது இந்த கேள்விகளை கேட்கலாம். எந்த இடத்தில் எந்த விஷயத்தை கேட்க வேண்டும் என்று தெரிந்துக்கொள்ளுங்கள் என்று சுரேஷ் கோபி பதில் தந்துள்ளார்.





