எப்போதுமே பிக்பாஸ் நிகழ்ச்சி பார்க்கும் ரசிகர்கள் கடைசியில் ஒருவித ஏமாற்றத்தை விரக்தியை அடைவது ஒவ்வொரு சீசனிலும் வழக்கமாக நடந்துதான் வருகிறது. எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று தாரக மந்திரமாக அடிக்கடி சொல்லப்படும் பிக்பாஸ் வீட்டில் உண்மையில் பல விஷயங்கள் எதிர்பாராமல்தான் நடக்கும்.
அதில் மிகவும் முக்கியமான ஒன்று டைட்டில் வின்னர் வெற்றியாளர் யார் என்பதுதான். அதே போல் நன்றாக விளையாடுபவர்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்து திடீரென வெளியேற்றம் செய்யப்படுவதும் இருக்கிற இடம் தெரியாமல் இருக்கும் சில போட்டியாளர்கள் கடைசி வரை பிக்பாஸ் வீட்டுக்குள் இருப்பதும் பார்வையாளர்களை விரக்தியடைய செய்கிறது.
இந்த சீசனிலும் அதே குழப்பமான ஒரு மனநிலையில்தான் பிக்பாஸ் ரசிகர்கள் இருந்து வருகின்றனர். ஏனென்றால் எதிர்பார்க்கப்பட்ட நல்ல முறையில் விளையாடிய சில போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்து சில வாரங்களிலேயே வெளியேற்றப்பட்ட நிலையில் இப்போது வீட்டுக்குள் இறுதி கட்டத்தில் இருப்பவர்கள் 4 பேர் மட்டுமே.
இதில் விக்கல்ஸ் விக்ரம் சபரிநாதன் இருவருமே பெரிய அளவில் ரசிகர்களிடம் அபிமானம் அங்கீகாரம் பெறாதவர்களாக இருக்கின்றனர். உண்மையில் இந்த சீசனில் சர்ச்சைகளில் சிக்கினாலும் டாஸ்க்குகளில் நன்றாக விளையாடிய இருவர் பார்வதி மற்றும் கம்ருதீன் தான். ஆனால் அவர்களது தவறான வரம்பு மீறிய நடவடிக்கையால் ரெட் கார்டு காட்டி வெளியேற்றப்பட்டனர்.
தனது யதார்த்தமான குணத்தால் நல்ல பண்புகளால் ரசிகர்களை பெரிதாக கவர்ந்தவர் கானா வினோத். அவர்தான் இந்த சீசனில் பிக்பாஸ் டைட்டில் ஆக வெற்றி பெற தகுதியானவர் என பலரும் கருதிய நிலையில் அவரும் பணப்பெட்டி டாஸ்க்கில் அவசர முடிவு எடுத்து வெளியேறிவிட்டார். இப்போது அரோரா மற்றும் திவ்யா கணேஷ் இருவரில் யார் டைட்டில் வின்னர் என்பதே கேள்வியாக உள்ளது.
இதுவரை 8 சீசன்களில் ஆரவ் ஆரி அர்ச்சனா முகமது அசீம் முகின் முத்துக்குமரன் ரித்விகா ராஜூ என ஏ ஆர் எம் என 3 ஆங்கில எழுத்துகளை முதலில் கொண்ட போட்டியாளர்களே டைட்டில் வின்னராக உள்ளனர். அந்த ஜோதிட சென்டிமென்ட் வகையில் அரோரா தான் ஏ வரிசையில் உள்ளார். அதனால் அவருக்குதான் டைட்டில் வின்னர் வாய்ப்பு அதிகம் என்றும் ஒரு தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.





