சமீபத்தில் இந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கியவர் இந்தி நடிகர் ரன்வீர் சிங் என்ற தகவல் வெளியானது. அவர் நடித்த துரந்தர் 2 படத்துக்காக 325 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது. அதே போல் நடிகர்கள் பிரபாஸ் அல்லு அர்ஜூனா போன்றவர்களும் 300 கோடி ரூபாய் வரை சம்பளம் பெறுவதாக ஒரு தகவல் பரவி வருகிறது.
அதே போல் இந்தி நடிகர் ஷாருக்கான் சம்பளமும் 300 கோடி ரூபாய்க்கு மேல் என்றும் சொல்லப்படுகிறது. இதற்கிடையே தமிழ் சினிமாவில் ஜனநாயகன் படத்தில் நடிக்க நடிகர் விஜய்க்கு 275 கோடி ரூபாய் சம்பளம் தரப்பட்டதாக கூறப்பட்டது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கியவர் நடிகர் விஜய் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சீனியர் நடிகர்களான ரஜினிகாந்த் கமல்ஹாசன் போன்றவர்கள் ஒரு படத்தில் நடிக்க 150 கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்கி வருகின்றனர். நடிகர் அஜீத்குமார் ஆரம்பத்தில் 110 கோடி சம்பளம் வாங்கிய நிலையில் பிறகு 150 கோடி ரூபாய் சம்பளம் பெற்றதாக கூறப்பட்டது. குட் பேட் அக்லி படத்துக்கு பிறகு அவர் தனது சம்பளத்தை 185 கோடி ரூபாயாக உயர்த்தினார்.
ஆனால் அவரை வைத்து படம் எடுக்க தயாரிப்பாளர்கள் யாரும் முன் வரவில்லை. இதையடுத்து அவர் தனது சம்பளத்தை 150 கோடி ரூபாயாக குறைத்து இருக்கிறார். எனினும் அவரை வைத்து படம் எடுக்க வரும் தயாரிப்பாளர்கள் 110 கோடி ரூபாய் சம்பளம் என்றால் ஓகே என்கின்றனர். அதனால் அஜீத்குமாரின் அடுத்த படம் உருவாவதில் தொடர்ந்து இழுபறி நிலை நீடிக்கிறது.
இதற்கிடையே நடிகர்கள் பலரும் 50 கோடி ரூபாய் 75 கோடி ரூபாய் வரை அதிக சம்பளம் பெறுபவர்களாக இருக்கின்றனர். இதில் நடிகர் சூர்யா அதிகபட்சமாக கடைசியாக 60 கோடி ரூபாய் வரை சம்பளம் பெற்றதாக தகவல் வெளியானது. நடிகர் சூர்யா கருப்பு படத்தின் அபார வெற்றிக்கு பிறகு தனது சம்பளத்தை ரூ. 100 கோடியாக உயர்த்திவிட்டார் என்று முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. இது சூர்யா ரசிகர்களுக்கு உற்சாகத்தை தந்துள்ளது.
ஏனென்றால் கருப்பு படம் தமிழ்நாட்டில் மட்டுமே 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை அள்ளியது. இந்த படம் உலகம் முழுவதும் 340 கோடி ரூபாய் வசூலை அள்ளியது. அதனால் தனது சம்பளத்தை 60 கோடியிலிருந்து 100 கோடி ரூபாயாக நடிகர் சூர்யா உயர்த்தியிருக்கிறார். இப்போது தமிழ் சினிமாவில் 100 கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்கும் டாப் ஸ்டார் நடிகர்கள் வரிசையில் சூர்யாவும் அந்த லிஸ்ட்டில் இணைந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.





