இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தில் நடிகர் சசிக்குமாருக்கு ஜோடியாக நடித்தவர் மாளவிகா மோகனன். இதுதான் அவரது தமிழில் அறிமுகமான முதல் படம். அதற்குப் பின்பு நடிகர் விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்திலும் தனுஷ் ஜோடியாக மாறன் படத்திலும் விக்ரம் நடித்த தங்கலான் படத்தில் முக்கிய கேரக்டரிலும் மாளவிகா மோகனன் நடித்திருந்தார்.
நடிகர் கார்த்தி நடித்துள்ள சர்தார் 2 படத்திலும் அவர் நடித்திருக்கிறார். இப்போது தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கும் பாக்கெட் நாவல் என்ற படத்தில் மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஒரு மாதமாக சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் அமைக்கப்பட்ட செட்டில் நடந்து வந்தது.
கடந்த மார்ச் மாதத்தில் சென்னையில் தனிமையில் இருந்தது குறித்து மாளவிகா மோகனன் தனது வலைதள பக்கத்தில் ஒரு பதிவை செய்து இருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது, மார்ச் மாதம் எனக்கு ஒரு கலவையான மாதமாக இருந்தது. அந்த மாதத்தின் பெரிய ஹைலைட் பாக்கெட் நாவல் படத்தின் சூட்டிங் மற்றும் தியாகராஜ குமார் ராஜா இயக்கத்தில் நடித்தது.
நமது தலைமுறையின் மிகச்சிறந்த இயக்குனர்களின் ஒருவர் என்று சொல்லலாம். அவர் வேலை செய்யும் முறையைப் பார்த்து அவரால் வழிநடத்தப்பட்டு வடிவமைக்கப்பட்டு இருப்பது என் கேரியரில் இதுவரையில் நான் பெற்ற மிகச் சிறப்பான கிரியேட்டிவ் அனுபவங்களின் ஒன்று. இது பற்றி பின்னாடி விரிவாக எழுதுகிறேன். அது பெரிய நீண்ட கதை. மாதத்தின் பெரும்பகுதியை சென்னையில் சூட்டிங்கிற்காக செலவிட்டேன்.
வேலை அற்புதமாக இருந்தாலும் வீட்டை விட்டு இவ்வளவு நாள் தள்ளி இருந்தது எதிர்பார்த்ததை விட அதிகமாக என்னை பாதித்தது. நீண்ட நாள் வேலை முடிந்து காலியான அறைக்கு திரும்புவது எளிதாகவே இல்லை. எவ்வளவு தடவை செய்தாலும் அது பழகாது போல. இந்த முறை தனிமை என்னை ரொம்பவே உலுக்கியது. குடும்பம் 2 நாள் வருகை தந்த போது என் ஆன்மாவுக்கு ஒரு பெரிய இடைவெளி கிடைத்தது. சென்னை மற்றும் மகாபலிபுரத்தின் அழகான கோவில்களை சுற்றிப் பார்த்தோம்.
உள்ளூர் உணவு வகைகளை எல்லாம் சாப்பிட்டோம். அவர்களுடன் இருந்ததே ரொம்ப நன்றாக இருந்தது. குறிப்பாக என் பாட்டி வந்தது. அவர் அரிதாக தான் வருவார். மாதத்தின் பெரும்பகுதியை வெளியில் செலவழித்து விட்டு சில நாட்களுக்கு முன்புதான் மும்பைக்கு திரும்பினேன். 2 நாள் முன்பு ஒரு அழகான சூரிய அஸ்தமன படகு சவாரி போனேன். வானம் அற்புதமாக இருந்தது. கடல் காற்று குணப்படுத்துவதாக இருந்தது. அலைகள் மிகவும் இதமாக இருந்தன. அந்த மாலை வீட்டை ரொம்பவே மிஸ் செய்த நிலையில் மும்பையின் மீது இன்னும் கொஞ்சம் காதல் விழுந்தது என்று மாளவிகா மோகனன் அந்த பதிவில் கூறியிருக்கிறார்.





