நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். அவரது ரெட்ரோ படம் வருகிற மே 1ம் தேதி ரிலீஸாகிறது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவான இந்த படம் நிச்சயமாக மாபெரும் வெற்றிப் படமாக சூர்யாவுக்கு அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் நடிகர் சூர்யாவின் கெட்டப், நடிப்பு இந்த படத்தில் வேற லெவலில் இருக்கிறது.
ரெட்ரோ படத்தில் இருந்து வெளியான டீசர் மற்றும் பர்ஸ்ட் சிங்கிள் பாடல் கண்ணாடிப் பூவே செகன்ட் சிங்கிள் பாடல் கனிமா 3வது சிங்கிள் பாடல் ஏ ஒன் என 3 பாடல்களுமே ரசிகர்கள் மத்தியில் பெரிய கவனத்தை வரவேற்பை பெற்றிருக்கிறது. அதனால் ரெட்ரோ படம் நிச்சயமாக பெரிய ஹிட் அடிக்கும் என்று சொல்லப்படுகிறது.
நாளை 18ம் தேதி சென்னை நேரு இண்டோர் ஸ்டேடியத்தில் ரெட்ரோ படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் டிரெய்லர் வெளியீடு நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாடு முழுவதும் இருந்து பல ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பங்கேற்க உள்ளனர். மேலும் இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொள்ள உள்ளதாகவும் ஒரு தகவல் பரவி வருகிறது.
நடிகர் சூர்யாவை பொருத்த வரை மற்ற நடிகர்களை விட சில விஷயங்களில் தனித்தன்மை வாய்ந்தவர். குறிப்பாக ரசிகர்களை மதிக்கும் நல்ல பண்பாளர். விமான நிலையம் போன்ற பகுதிகளில் தன்னுடன் செல்பி எடுக்க வரும் ரசிகருக்காக நின்று செல்பி தந்துவிட்டுதான் செல்வார். தவிர, சில மாதங்களுக்கு ஒருமுறை தன் ரசிகர்களை ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே வரவழைத்தும் நாள் முழுக்க தன்னுடன் போட்டோ எடுத்துக்கொள்ள அனுமதிப்பார்.
சூர்யா நற்பணி மன்றங்கள் மூலமாக பல ரசிகர்கள் பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர். அவர்கள் சூர்யாவை நேரில் சந்திக்க விரும்பியதால் சமீபத்தில் சென்னை போரூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அந்த சந்திப்பு கூட்டத்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் இருந்து நடிகர் சூர்யாவை சந்திக்க 3500 பேர் வரை இந்த மண்டபத்துக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பலரும் வாகனங்களில் சூர்யா போட்டோவுடன் பேனர்களை கட்டிக்கொண்டு, திருமண மண்டபத்தில் ரசிகர்கள் குழுமியுள்ளனர்.
இதையடுத்து தகவலறிந்து அங்கு வந்த உளவுத்துறை போலீசார், நடிகர் சூர்யா அரசியல் வருகை குறித்த அறிவிப்பை இங்கு செய்கிறாரா, என்று திருமண மண்டப உரிமையாளரிடம் விசாரணை நடத்தி உள்ளனர். முறைப்படி அனுமதி பெற்று இந்த கூட்டம் நடக்கிறது. இது சூர்யா ரசிகர்கள் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள வந்த சாதாரண கூட்டம்தான் என தெளிவுபடுத்திய பிறகே நிம்மதி பெருமூச்சு விட்டு போலீசார் அங்கிருந்து திரும்பி சென்றுள்ளனர்.





