நடிகர் சூர்யா நடிப்பில் வருகிற அக்போபர் 10ம் தேதி கங்குவா படம் ரிலீஸ் ஆகிறது. சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியாகும் இந்த படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த படத்தின் டிரெய்லர் வருகிற 12ம் தேதி, இயக்குனர் சிறுத்தை சிவா பிறந்த நாளன்று வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கங்குவா படம் முதல் பாகமாக வெளியாகும் நிலையில், கங்குவா 2ம் பாகமும் உருவாகிறது. இந்த படத்தில் சூர்யாவுக்கு எதிராக, பிரதான வில்லன் கேரக்டரில் அவரது தம்பி கார்த்தி நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் கங்குவா 2ம் பாகத்துக்கான படப்பிடிப்புகளை துவங்கவும், அதற்கு முன்பாக பிரமோ காட்சிகளை எடுக்கவும் படக்குழு தயாராகி வருகிறது.
கங்குவா படத்தை தொடர்ந்து இயக்குனர் பாலாவின் வணங்கான் படத்தில் நடித்த சூர்யா, அதில் இருந்து விலகிவிட்டதால் அந்த படத்தில் நடிகர் அருண் விஜய் நடித்தார். அதன்பிறகு சுதா கொங்கரா இயக்கத்தில் புறநானூறு படத்தில் கமிட் ஆன சூர்யா அந்த படத்திலும் நடிக்காமல் வெளியேறிதால், அந்த கேரக்டரில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார்.
இதற்கு மத்தியில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா 44 என பெயர் தற்காலிக பெயர் வைக்கப்பட்டுள்ள படத்தின் படப்பிடிப்பு. கடந்த பல வாரங்களாக அந்தமானில் நடந்து வந்தது. இதில் சூர்யா பங்கேற்று நடித்தார். அந்தமானில் தினமும் பாம்புகள் தொல்லை அதிகரித்ததால், அங்கு படப்பிடிப்பை தொடர்ந்து நடத்த முடியாமல் இப்போது ஊட்டியில் ஷூட்டிங் நடந்து வந்தது.
இந்நிலையில், ஊட்டியில் நடந்த படப்பிடிப்பில், சூர்யா பங்கேற்ற சண்டைக்காட்சி படமாக்கப்பட்ட போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில் நடிகர் சூர்யாவுக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இதனால் படப்பிடிப்புக் குழுவினர் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டது.அதன்பிறகு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் சூர்யாவுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டது. தலையில் ஏற்பட்டது லேசான காயம்தான், பாதிப்பு பெரிய அளவில் ஒன்றுமில்லை என்று டாக்டர்கள் உறுதிப்படுத்தியதால், படப்பிடிப்புக் குழுவினர் நிம்மதியடைந்தனர். எனினும் சில நாட்கள் ஓய்வில் இருக்குமாறு டாக்டர் அறிவுறுத்தி உள்ளனர்.
இதையடுத்து நடிகர் சூர்யா, சில தினங்கள் ஓய்வுக்கு பிறகே அவரது 44வது படத்தின் படப்பிடிப்பில் கலந்துக்கொள்வார் என்று கூறப்படுகிறது. அதுவரை படத்தில் நடித்துள்ள மற்ற நடிகர்கள், நடிகைகள் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படும் எ்ன்று தெரிகிறது. நடிகர் சூர்யாவுக்கு தலையில் காயம்பட்ட சம்பவம், அவரது ரசிகர்கள் மத்தியிலும், தமிழ் சினிமா துறையினர் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியது.





