தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களால் ஒருவராக இருப்பவர் நடிகர் சூர்யா. சீனியர் நடிகர் சிவக்குமாரின் மூத்த மகன். நேருக்கு நேர் படம் மூலம், தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பிறகு ஜோதிகாவுடன் பூவெல்லாம் கேட்டுப்பார் என்ற படத்தில் ஜோடியாக நடித்தார். மௌனம் பேசியதே, நந்தா, காக்க காக்க படங்களால் ரசிகர்களின் மனம் கவர்ந்தார் சூர்யா.
தொடர்ந்து கஜினி, வாரணம் ஆயிரம், சில்லுன்னு ஒரு காதல், சிங்கம், ஏழாம் அறிவு, அயன் போன்ற படங்களால் முன்னணி நடிகராக சூர்யா மாறினார். துவக்கத்தில் நடிக்கவே தெரியாதவர் என்று விமர்சிக்கப்பட்ட சூர்யா, அந்த விமர்சனங்களை எல்லாம் அடித்து நொறுக்கி முன்னணி நடிகராக முன்னேறினார்.
இந்த சூழலில் நடிகை ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இது சிவக்குமார் உள்ளிட்ட குடும்பத்தினருக்கு பிடிக்கவில்லை என்றாலும், ஒரு கட்டத்தில் சூர்யாவின் விருப்பத்தை தடுக்க முடியாமல் திருமணத்துக்கு சம்மதித்தனர். ஆனால் ஜோதிகா, சூர்யா பொதுவெளிகளில் மேடைகளில் சில கருத்துகளை தெரிவித்து விமர்சனங்களில் சிக்கினர்.
இந்த சூழலில் கடந்த 14ம் தேதி சூர்யா நடிப்பில் வெளியான கங்குவா படம், மோசமான விமர்சனங்களால் படுதோல்வி அடைந்துள்ளது. 2000 கோடி ரூபாய் வசூலிக்கும் என்று கூறப்பட்ட இந்த படம், 200 கோடி ரூபாய் கூட தாண்ட வாய்ப்பில்லை என்று ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். நெருப்பு மாதிரி படம் இருக்கும், வாயை பிளந்துகிட்டு பார்ப்பீங்க என்று சூர்யா பேசியதால் ரசிகர்கள் பயங்கரமாக அவர் பேசியதை ட்ரோல் செய்து வருகின்றனர்.
இந்த சூழலில் கடந்த 2014ம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டு வரை 10 ஆண்டுகளில் தியேட்டர்களில் வெளியான சூர்யாவின் 10 படங்களும் படுதோல்வி அடைந்த அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அஞ்சான் ( 2014) மாஸ், பசங்க 2 ( 2015) 24 ( 2016) சிங்கம் 3 ( 2017) தானா சேர்ந்த கூட்டம் (2018) என்ஜிகே, காப்பான் (2019) எதற்கும் துணிந்தவன் (2022) கங்குவா (2024) என தொடர்ந்து படுதோல்வியை சந்தித்துள்ளார்.
கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் 12ம் தேதி சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்த சூரரைப் போற்று படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. அடுத்து தசெ ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்த ஜெய்பீம் படம் கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் 2ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. இந்த 2 படங்கள் மட்டுமே சூர்யாவுக்கு வெற்றிப் படங்களாக அமைந்தன என்பது குறிப்பிடத்தக்கது.





