தமிழ் சினிமாவில் இருந்து ஏகப்பட்ட நடிகர் நடிகைகள் அரசியலுக்கு வந்து விட்டனர். ஆனால் இதில் மக்கள் மத்தியில் வரவேற்பும் ஆதரவும் பெற்று ஜெயித்தவர்கள் மிகவும் குறைவுதான். அந்த வகையில் முதலில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர்தான் மக்களிடம் அமோக வரவேற்பை பெற்றவர்.
அவருக்கு பிறகு அரசியல் களத்துக்கு வந்த நடிகர் விஜயகாந்துக்கு மக்கள் மத்தியில் நல்ல செல்வாக்கு இருந்தது. அவருக்கும் தேர்தலில் மக்கள் அதிக அளவில் ஓட்டு போட்டு ஜெயிக்க வைத்து அவரை தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவராக அமர வைத்தனர். அவர் மட்டும் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருந்திருந்தால் நிச்சயமாக அவர் தமிழக முதல்வராக அமரும் வாய்ப்பு இருந்திருக்கும்.
ஆனால் துரதிஷ்டவசமாக கேப்டன் விஜயகாந்த் உடல்நலம் பாதிக்கப்பட்டு 71 வயதில் மறைந்து விட்டார். எம்ஜிஆர் விஜயகாந்த் ஆகியோரை தொடர்ந்து இப்போது நடிகர் விஜய் தமிழக அரசியல் களத்தில் இருந்து வருகிறார். அவருக்கு மக்கள் மத்தியில் அபரிமிதமான வரவேற்கும் ஆதரவும் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவில் இருந்து கமல்ஹாசன் டி ராஜேந்தர் கே பாக்யராஜ் சரத்குமார் கருணாஸ் மன்சூர் அலிகான் நடிகர் கார்த்திக் என பலரும் அரசியல் களத்துக்கு வந்தனர்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஒரு காலத்தில் அரசியலில் இருந்தவர்தான். ஆனால் இவர்களில் யாருக்குமே பெரிய அளவில் அரசியலில் மக்கள் ஆதரவு தரவில்லை. சினிமாவில் நடிகராக அவர்களை வரவேற்ற அளவுக்கு அரசியல் களத்தில் அவர்களை மக்கள் கண்டு கொள்ளாமல் அலட்சியப்படுத்தினர். ஆனால் இப்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியின் தலைவராக உள்ள நடிகர் விஜய் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறார்.
நாளை மதுரையில் அவரது தவெக கட்சியின் 2வது மாநில மாநாடு மிகப் பிரமாண்டமாக நடக்கிறது. பல லட்சம் மக்கள் திரண்டு இந்த மாநாட்டுக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வரும் நடிகர் சூர்யா அரசியலுக்கு வர உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் வைரலாகி வருகிறது. ஆனால் இது குறித்து நடிகர் சூர்யாவின் தலைமை நற்பணி இயக்கம் மறுத்துள்ளது. இது குறித்து சூர்யா தலைமை ரசிகர் தலைமை நற்பணி இயக்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில் கூறியிருப்பதாவது, கடந்த சில நாட்களாக சூர்யா பற்றி சில பொய்யான தகவல்கள் இணையத்தில் பரவி வருகிறது. சட்டமன்றத் தேர்தலில் சூர்யா களமிறங்க போகிறார் என்று பொய்யான தகவல் பரவி வருகிறது. இது உண்மைக்கு மாறான போலியான தகவல் என்பது மட்டுமல்ல, சூர்யாவின் கோட்பாடுகளுக்கு இது முரணானது. கலையுலக பயணமும் அகரமும் இப்போதைய அவர் வாழ்வுக்கு போதுமான நிறைவை தந்துள்ளது. சூர்யாவை நேசிக்கும் கோடிக்கணக்கான தம்பி தங்கைகள் நண்பர்களின் வாழ்த்துகளோடு சினிமாவில் மட்டுமே சூர்யாவின் கவனம் இருக்கும். நடிகர் சூர்யா பற்றி வெளியான போலியான இந்த தகவலை திட்டவட்டமாக மறுக்கிறோம் என்று சூர்யா தலைமை நற்பணி இயக்கம் கூறியுள்ளது.





