தமிழ் சினிமாவில் காமெடி நடிப்பில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் எஸ்வி சேகர். நாடகப்பிரியா என்ற பெயரில் ஆயிரக்கணக்கான மேடை நாடகங்களை அரங்கேற்றம் செய்தவர். இவரது காமெடி பஞ்ச் டயலாக் ரசிகர்களை ரசித்து ரசித்து சிரிக்க வைக்கும். கடந்த 1980 90களில் பல படங்களில் நடித்திருக்கிறார்.
குறிப்பாக நடிகர் விசு இயக்கிய பல படங்களில் எஸ்வி சேகர் பிரதான கேரக்டரில் ஒருவராக இருப்பார். குறிப்பாக மணல் கயிறு சிதம்பர ரகசியம் வறுமையின் நிறம் சிவப்பு போன்ற படங்களில் சிறப்பாக நடித்திருப்பார். அதே போல் பூவே பூச்சூடவா கதாநாயகன் ஜீன்ஸ் என பல படங்களில் நடித்தவர்.
அதிமுக பாஜக திமுக என பல கட்சிகளில் சேர்ந்த எஸ்வி சேகர் அவ்வப்போது அரசியல் சினிமா சார்ந்த தனது கருத்துகளை வெளியிட்டு வருபவர். இப்போதும் சினிமாவில் சின்ன சின்ன கேரக்டர்களில் அவர் நடித்து வருகிறார். அத்துடன் நாடகப்பிரியா சார்பில் அவ்வப்போது நாடகங்களை அரங்கேற்றம் செய்து வருகிறார்.
இந்நிலையில் நடிகர் மாதவன் நடிகை நயன்தாரா நடித்த டெஸ்ட் என்ற திரைப்படம் சில தினங்களுக்கு முன்பு நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. ஏற்கனவே நயன்தாரா நடித்த நெற்றிக்கண் உள்ளிட்ட சில படங்கள் தியேட்டர்களில் ரிலீஸாகாமல் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளன. அதேபோல் டெஸ்ட் படமும் ஓடிடியில் வெளியானது.
இந்த படத்தில் முதலில் நடிக்க கமிட் செய்யப்பட்டு பிறகு நடிகர் எஸ்வி சேகர் நீக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து நடிகர் எஸ்வி சேகர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் எஸ்வி சேகர் இந்த படம் நிச்சயமாக ஓடாது என்று முனிவர் போல சாபம் விட்டிருப்பது ரசிகர்கள் மத்தியில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த பதிவில் நடிகர் எஸ்வி சேகர் கூறியிருப்பதாவது, என்னை ஒரு படத்தில் புக் செய்த பிறகு நானாக விலகினாலோ விலக்கப்பட்டாலோ அந்த படம் ரிலீஸ் ஆகி தியேட்டருக்கு வராது. வந்தாலும் ஓடாது. இது வரலாறு. வரலாறு தொடர்கிறது என்று டெஸ்ட் படத்தின் போஸ்டரை வெளியிட்டு எஸ்வி சேகர் அந்தப் பதிவில் கூறியிருக்கிறார். இது தற்போது வைரலாகி வருகிறது.





