நடிகர் விஜய் இப்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தின் தலைவராக இருந்து வருகிறார். அவரது கட்சியில் காமெடி நடிகர் தாடி பாலாஜியும் இணைந்திருக்கிறார். தொடர்ந்து கட்சி நிகழ்ச்சிகளில் தாடி பாலாஜி பங்கேற்று வருகிறார். ஆனால் கட்சியின் பொதுச் செயலாளராக உள்ள புஸ்லி ஆனந்த் மீது தொடர்ந்து அவர் புகார் கூறி வருகிறார்.
ரசிகர் மன்ற நிர்வாகியாக இருந்த புஸ்லி ஆனந்தை, தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் பொதுச் செயலாளராக விஜய் நியமித்துள்ளார். கட்சியின் முழு நிர்வாகம் செயல்பாடுகளும் அவரது கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், அவர் மீது கட்சி நிர்வாகிகள் பலரும் பாரபட்சமாக அவர் நடந்துக்கொள்வதாக குறை கூறி வருகின்றனர். நடிகர் தாடி பாலாஜியும் அதே குற்றச்சாட்டுகளை கூறியிருப்பது அக்கட்சியினர் மத்தியில் பலத்த அதிர்ச்சியை தந்துள்ளது.
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற நடிகர் தாடி பாலாஜி கூறியதாவது, நடிகர் விஜயுடன் பல படங்களில் ஒன்றாக நடித்து அவருடன் பயணித்தவன் நான். அதே போல் ரசிகர் மன்ற நிர்வாகியாக புஸ்லி ஆனந்த் விஜயுடன் பயணித்தவர்தான். அவருடைய எண்ணமும் என்னுடைய எண்ணமும் இரண்டுமே ஒன்றுதான். ஆனால் நான் வந்து தலைவர் விஜயை பார்ப்பதும் நேரில் சந்திப்பதிலும் அவருக்கு என்ன நெருடல் இருக்கிறது என்று எனக்கு தெரியவில்லை.
அவர் மீது சில விமர்சனங்கள் வந்த போது அவர் வாய் திறந்து பேசவில்லை. என் மீது எந்த தப்பும் இல்லை என்று அவர் வாய் திறந்து சொல்லவில்லை. கட்சிக்குள் பதவி தர காசு வாங்குகிறார்களா என்பது அவர்களுக்குள் உள்ள பிரச்னை. அது நமக்கு தேவையில்லாத வேலை. அதைப்பற்றி நான் பேச விரும்பவில்லை.
என்னுடைய மனக்குமுறல் இதுதான். ஒருவன் கஷ்டப்பட்டு கட்சிக்காக உழைக்கிறான். தவெக கட்சியில் 50 ஆயிரம் ரூபாய் செலவு செய்து நிகழ்ச்சி நடத்துபவனும் இருக்கிறான். 5 லட்சம் ரூபாய் செலவு செய்து நிகழ்ச்சி நடத்துபவனும் இருக்கிறான். ஆனால் அவர்களது வலி வேதனை என்னவென்றால், இது தலைவருக்கு தெரியலையே என்பதுதான்.
என்கிட்ட சொன்ன அத்தனை பேரோட மனக்குமுறலும் இதுதான். நாளைக்கு தலைவர் விஜயே என்னை கூப்பிட்டு இப்படி பேசறீங்களே என்று கேட்டால் கூட ஆமாங்க இதுதான் உண்மை என்று சொல்லி விடுவேன் என்று நடிகர் தாடி பாலாஜி இந்த நேர்காணலில் தவெக கட்சி செயல்பாடுகள் குறித்து வெளிப்படையாக விமர்சித்து பேசியிருக்கிறார்.





