தமிழ் சினிமாவில் சில ஆண்டுகளுக்கு முன்பு யார் சூப்பர் ஸ்டார் என்ற பஞ்சாயத்து கிளம்பிய நிலையில் நடிகர்கள் ரஜினிக்கும் விஜய்க்கும் இடையே மறைமுக மோதல் ஏற்பட்டது. இதில் ரஜினி சொன்ன காக்கா கழுகு கதையும் இன்னும் பிரச்சனையை அதிகரிக்கச் செய்தது. ஒரு கட்டத்தில் ரஜினி குறித்து விஜயும், விஜய் குறித்து ரஜினியும் சமரசமாக பேசியதால் அந்த பிரச்சனை சுமூகமான ஒரு முடிவுக்கு வந்தது.
இந்த சூழ்நிலையில் தவெக கண்டன ஆர்ப்பாட்டத்தில் நடிகர் ரஜினிகாந்த் குறித்து அக்கட்சியின் முக்கிய நிர்வாகி ஆதவ் அர்ஜூனா சில விமர்சனங்களை முன்வைத்து பேசியிருந்தார். இது ரஜினி ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில் அவர்கள் தங்களது கண்டனத்தை எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.
இதற்கிடையே எடப்பாடி பழனிசாமி அண்ணாமலை நயினார் நாகேந்திரன் அன்புமணி ராமதாஸ் திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் ரஜினிக்கு ஆதரவாக ஆதவ் அர்ஜூனாவுக்கு கண்டனம் தெரிவித்தனர். அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர்கள் கூறினார் இந்த சூழ்நிலையில் தனக்கு ஆதரவாக பேசிய அரசியல் கட்சி தலைவர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் இன்று நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
ரஜினிகாந்த் வெளியிட்ட அறிக்கை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அரசியல் பற்றி யார் கேள்வி கேட்டாலும் நோ கமெண்ட்ஸ் என்று கூறுவதை ரஜினிகாந்த் பல ஆண்டுகளாக வழக்கமாக வைத்திருக்கிறார். அதே போல் அவரைப் பற்றிய விமர்சனங்களுக்கும் எந்த பதிலும் தராமல் அமைதியாக சினிமாவில் நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார். ரஜினிகாந்த் குறித்து ஆதவ் அர்ஜூனா பேசியது பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பிய நிலையில் ரஜினி மௌனம் கலைத்திருக்கிறார்.
ரஜினிகாந்த் வெளியிட்ட அறிக்கையில், காலம் பேசாது. ஆனால் காத்திருந்து பதில் சொல்லும் என்ற வரிகளை குறிப்பிட்டிருக்கிறார். இது மறைமுகமாக வருகிற சட்டசபை தேர்தலில் விஜய் கட்சிக்கு தனது ரசிகர்கள் மூலம் மிகப்பெரிய ஆபத்து காத்திருக்கிறது என்பதை ரஜினிகாந்த் மறைமுகமாக சுட்டிக்காட்டி இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். விஜய்க்கு தமிழ்நாடு முழுவதும் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறதோ அதேபோல் ரஜினிக்கும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய செல்வாக்கும் ஆதரவும் இருந்து வருகிறது.
75 வயதிலும் இன்னும் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கும் அவரை பற்றி பேசியதற்கு வருகிற தேர்தலில் விஜய்க்கும் விஜய் கட்சிக்கும் தரமான பதிலடி கிடைக்கும் என்பதை தான் ரஜினி இன்று அறிக்கை வாயிலாக சூசகமாக கூறியிருப்பதாக பலரும் கூறுகின்றனர். ஏற்கனவே பல பஞ்சாயத்துகளில் சிக்கி தவிக்கும் நடிகர் விஜய்க்கு இப்போது ரஜினி ரசிகர்களாலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்பது கவனிக்கத்தக்கது.





