இயக்குனர் விக்ரமனிடம் உதவியாளராக இருந்தவர் ராஜகுமாரன். ஆரம்பத்தில் விக்ரமனுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் அவர் பணியாற்றி இருக்கிறார். குறிப்பாக சூரிய வம்சம் திரைப்படத்தில் ராஜகுமாரன் ஒரு காட்சியிலேயே நடித்திருப்பார்.
மணிவண்ணன் பேருந்து நிறுத்தத்தில் காத்திருக்க, பேருந்தில் பயணம் செய்யும் ராஜகுமாரன் அவரைப் பார்த்து நல்லா இருக்கீங்களா என்று குழப்பிவிடும் நகைச்சுவை காட்சி இன்று வரை பிரபலம். இதன் மூலம் பலராலும் ராஜகுமாரன் அறியப்பட்டார். இவருக்கு இயக்குனராக முதன் முதலில் வெளிவந்த திரைப்படம் நீ வருவாய் என.
ஆர் பி சவுத்ரி தயாரித்திருந்த இந்த திரைப்படத்தில், அஜித் குமார், பார்த்திபன், தேவயாணி ஆகியோர் நடித்திருந்தனர். காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அது மட்டுமல்லாமல் இந்த படத்தின் பணியின் போது, இயக்குனர் ராஜகுமாரனுக்கும் தேவயானிக்கும் இடையே காதல் மலர்ந்தது. ஆனால் நடிகையின் பெற்றோர் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து இயக்குனர் விக்ரமன் முன்னிலையில் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். இதனால் நீ வருவாய் என ராஜகுமாரனுக்கு மிக முக்கியமான படம் என்று கூறலாம். அதில் காதலனை இழந்த காதலி அதையே நினைத்துக் கொண்டிருக்க, அந்தப் பெண்ணை வேறு ஒருவர் காதலிப்பது போன்று காட்சிகள் இடம் பெற்று இருக்கும்.
மேலும் தனது காதலனின் கண்கள் அந்த இளைஞனுக்கு பொருத்தப்பட்டு இருப்பதாக கதையை எழுதி இருப்பார் ராஜகுமாரன். இதில், காதலனாகவும் ராணுவ வீரராகவும் அஜித் நடித்திருந்தார். அவர் வரும் காட்சிகள் குறைவு தான் என்றாலும், அஜித் படத்தில் ரசிகர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பார்.
முதலில் அஜித் விஜய் மற்றும் தேவயானி ஆகியோர்தான் இந்த திரைப்படத்தில் நடிப்பதாக இருந்ததாம். ஆனால் கதையை கேட்ட விஜய், அஜித் கதாபாத்திரத்தை தனக்கு கொடுக்கும்படி கேட்டு இருக்கிறார். அதற்கு இயக்குனர் மறுத்து விட்டதால், படத்தில் இருந்து விஜய் விலகியுள்ளார். இதன் பிறகு பார்த்திபன் அந்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அஜித் விஜய் மட்டும் நடித்திருந்தால் படம் வேற லெவலில் இருந்திருக்குமே என்று ரசிகர்கள் கருத்து கூறிய வருகின்றனர்.





