நடிகர் விஜய் இப்போது ஜனநாயகன் என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். கேவிஎன் புரடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் இந்த படம் உருவாகியுள்ளது. அனிருத் இசையமைக்கிறார். வருகிற 2026ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு இந்த படம் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தின் தலைவராக உள்ள நடிகர் விஜய், வருகிற 2026ம் ஆண்டில் ஆளுங்கட்சி திமுகவை எதிர்த்து அரசியல் களத்தில் இறங்குகிறார். கட்சி ஆரம்பித்தது முதல் தொடர்ந்து திமுக குறித்தும் திமுக தலைவர் ஸ்டாலின் குறித்தும் திமுகவின் ஆட்சி குறித்தும் கடுமையான விமர்சனங்களை செய்து வருகிறார்.
இந்நிலையில் ஜனநாயகன் படம்தான் தனது கடைசி படம் என்று விஜய் அறிவித்துள்ள நிலையில், இந்த படத்தை ஜெயிக்க விடக்கூடாது என்பதில் திமுகவுக்கு நிச்சயமாக நோக்கம் இருக்காது என்பதை மறுக்க முடியாது. ஏனெனில் அரசியல் களத்தில் திமுகவை எதிர்க்கும் போது, சினிமா வெற்றியில் விஜயை அவர் எதிர்க்கவே செய்வார்கள்.
ஏனெனில் துணை முதல்வர் உதயநிதிக்கு சொந்தமான ரெட் ஜெயின்ட் மூவிஸ் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் தான் தமிழ்நாட்டில் பெரும்பாலான தியேட்டர்கள் இருக்கின்றன. ஏற்கனவே ஜனநாயகன் படத்துக்கு போட்டியாக பராசக்தி படத்தை களமிறக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் ஜனநாயகன் படம் குறித்து தனது கட்சியின் மூத்த நிர்வாகிகளிடம் நடிகர் விஜய் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.
நடிகர் விஜய் அவர்களிடம் பேசும் போது, ஜனநாயகம் படத்தில் இப்போதைய அரசியல் நிகழ்வுகள் குறித்த சில காட்சிகள் வருகின்றன. மற்றபடி யாருக்கு எதிராகவும் இந்த படம் எடுக்கப்படவில்லை. இந்த படத்துக்கு தடை ஏற்படுத்தினால் அது எவ்வளவு பெரிய சக்தியாக இருந்தாலும் அதை எதிர்த்து போராட தயாராகவும் உறுதியாகவும் இருக்கிறேன்.
ஜனநாயகன் படத்துக்கு எந்த வகையில் யார் பிரச்சனை ஏற்படுத்தினாலும் அதை வைத்து தேர்தல் நேரத்தில் பெரிய அளவில் அரசியல் செய்வேன். அதன் மூலமாகவும் சிலரின் முகமூடியை கிழிப்பேன் என்று நடிகர் விஜய் ஆவேசமாக கூறியிருக்கிறார். அதனால் ஜனநாயகன் ரிலீஸ் கோலிவுட்டில் மட்டுமின்றி அரசியல் களத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்த அதிக வாய்ப்புள்ளது.





