கோவையில் நடந்த தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் பூத் கமிட்டி கூட்டத்தில் பங்கேற்க அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் இன்று கோவைக்கு வருகை வந்தார். விமான நிலையம் மற்றும் வழி நெடுகிலும் நடிகர் விஜய்க்கு தவெக கட்சி தொண்டர்களும் ரசிகர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர். விஜய் நின்றிருந்த வாகனம் மீது ஏறி விஜய்க்கு அருகிலும் சிலர் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து பூத் கமிட்டி கூட்டத்தில் நடிகர் விஜய் பேசியதாவது, கொங்கு மண் என்றாலே இந்த மக்களின் மரியாதை தான் ஞாபகத்துக்கு வரும். இது ஓட்டுக்காக மட்டுமே நடக்கிற பூத் ஏஜண்ட் மீட்டிங் கிடையாது. நாம் ஆட்சிக்கு வந்து மக்களுக்கு என்ன செய்யப் போறோம். இதுவரைக்கும் மத்தவங்க பண்ணின மாதிரி நாம பண்ணப் போறது இல்லை.
நாம ஆட்சிக்கு வரவேண்டும் என நினைப்பதே மக்களுக்காக தான். மக்களோட நலனுக்காக தான். இந்த பூத் லெவல் ஏஜண்ட் மீட்டிங் நடத்தறதே மக்கள் கிட்ட இருந்து எப்படி ஓட்டை வாங்கறது என்பதை பத்தி பேசப் போற ஒரு பயிற்சி பட்டறை கிடையாது. ஓட்டு வாங்கறது முக்கியம்தான். அதை விட மக்களோட நாம எப்படி தொடர்பில் இருக்கப் போகிறோம்? மக்களோடு மக்களாக எப்படி ஒன்றிணையப் போகிறோம் என்பதே முக்கியம்.
அதை பத்தி டிஸ்கஸ் பண்றதுக்காக தான் முக்கியமாக இந்த பயிற்சி பட்டறை நடத்தப்படுகிறது. இதுக்கு முன்னாடி நிறைய பேரு வந்திருக்கலாம். போயிருக்கலாம். நிறைய பொய்களை சொல்லியிருக்கலாம். மக்களை ஏமாத்தி இருக்கலாம். இதெல்லாம் பண்ணி ஆட்சியை புடிச்சிருக்கலாம்.
அதெல்லாம் பழைய கதை. அதுக்காக எல்லாம் நான் இங்க வரலே. இனிமேல் அதெல்லாம் நடக்காது. நடக்க விடப் போறதும் கிடையாது. மக்கள் கிட்ட நம்ம கட்சி மேல் பெரிய நம்பிக்கையை கொண்டு வரப் போறது தேர்தல் களப் பணியில் பூத் லெவல் ஏஜண்ட்டுகளாக நீங்கதான். நீங்க ஒவ்வொருத்தரும் ஒரு போர் வீரனுக்கு சமம். நாம ஏன் வந்திருக்கோம் எதுக்கு வந்திருக்கோம். எப்படிப்பட்ட ஒரு ஆட்சியை அமைக்கப் போறோம் என்பதை எடுத்து கொண்டு போய் மக்கள் கிட்ட சொல்லுங்க.
கண்டிப்பா கேப்பாங்க, உங்ககிட்ட என்ன அனுபவம் இருக்கு. உங்களுக்கு என்ன அரசியல் அனுபவம் இருக்குன்னு கேட்பாங்க. ஆனா நீங்க யாரு உங்க கெபாசிட்டி என்னன்னு எனக்கு தெரியும். நம்மகிட்ட என்ன இல்லே, மனசுல நேர்மை இருக்கு. கறை படியாத அரசியல் செய்ய நம்பிக்கை இருக்கு லட்சியம் இருக்கு உழைக்க தெம்பு இருக்கு. பேசறதுக்கு உண்மை இருக்கு. செயல்படறதுக்கு திறமை இருக்கு அர்பணிப்பு குணம் இருக்கு களம் ரெடியா இருக்கு இதுக்கு மேல என்ன வேணும். போய் கலக்குங்க. கான்பிடண்டா இருங்க வெற்றி நிச்சயம் என்று நடிகர் விஜய் பேசியிருக்கிறார்.





