நடிகர் விஜய், இயக்குநர் எஸ்ஏ சந்திரசேகர் மகன் என்ற அடையாளத்துடன் தமிழ் சினிமாவுக்குள் வந்தவர். ஆரம்பத்தில் அறிமுக நாயகனாக நாளைய தீர்ப்பு என்ற படத்தில் நடித்தார். அவரது அப்பா எஸ்ஏ சந்திரசேகரே டைரக்ட் செய்த அந்த படம் சரியாக போகவில்லை. அதில் கல்லூரி மாணவராக விஜய் நடித்திருந்தார்.
பாரதிராஜா உள்ளிட்ட பல முக்கிய இயக்குநர்களை சந்தித்து, என் மகனை விஜயை வைத்து படம் இயக்குகங்கள் என எஸ்ஏ சந்திரசேகர் கேட்டுக்கொண்ட நிலையில், விஜயை வைத்து படம் இயக்க யாருமே முன்வரவில்லை. அதன்பிறகு ஒரு கட்டத்தில், தனது நெருங்கிய நண்பரும், தனது படங்களில் நடித்தவருமான விஜயகாந்தை கேட்ட போது, விஜயுடன் செந்தூரப்பாண்டி படத்தில் நடித்தார்.
விஜயகாந்த் தம்பியாக செந்தூரப்பாண்டியில் நடித்த பிறகு, ரசிகர்களால் விஜய் ஓரளவு கவனிக்கப்பட்டார். இதையடுத்து ரசிகன், தேவா, மாண்புமிகு மாணவன் போன்ற படங்களில் நடித்த விஜய்க்கு பூவே உனக்காக, துள்ளாத மனமும் துள்ளும், லவ்டுடே, பிரியமுடன், குஷி, காதலுக்கு மரியாதை போன்ற மிகப்பெரிய அடையாளத்தை தந்த படங்களாக அமைந்தன.
அதன்பிறகு காதல் படங்களில் நடித்து, மக்கள் மனதில் இடம்பிடித்த விஜய் திருமலை படத்தில் ஆக்ஷன் ஹீரோவாக அவதாரம் எடுத்தார். அதன்பிறகு கில்லி, திருப்பாச்சி, சிவகாசி, ஆதி, குருவி, வேட்டைக்காரன், போக்கிரி என ஆக்ஷன் ஹீரோவாக மாறி, முன்னணி ஹீரோவாக உயர்ந்தார். இப்போது நடித்து வரும் கோட் படத்துக்கு ரூ. 200 கோடி சம்பளம் வாங்குகிறார்.
நடிகர் விஜய் இப்போது நடித்து வரும் கோட், அதைத் தொடர்ந்து தனது 69 படத்துடன், சினிமாவுக்கு குட்பை சொல்லிவிட்டு, முழுநேர அரசியல் ஈடுபட போகிறார். எனினும் இப்போது விஜய் நடிக்க மறுத்து, பிளாக்பஸ்டர் மூவியாக வெற்றி பெற்ற படங்கள் குறித்த தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதில் மிக முக்கிய படங்களாக ஷங்கர் இயக்கத்தில் அர்ஜூன் நடித்த முதல்வன், தரணி இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்த தூள், லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடித்த சண்டக்கோழி, ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் தீனா, ஹரி இயக்கத்தில் சிங்கம் ஆகிய படங்களில் நடிக்க, கதையை கேட்டுவிட்டு மறுத்திருக்கிறார். அட இந்த படங்களில் நடித்திருந்தால் தளபதி இன்னும் வேற லெவலுக்கு போயிருப்பாரே, என விஜய் ரசிகர்கள் புலம்புகின்றனர்.





