தமிழ் சினிமாவில் மிக முக்கியமான முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. துணை நடிகராக சில படங்களில் நடித்த அவர் பிறகு தென்மேற்கு பருவக்காற்று படம் மூலம் கதாநாயகனாக மக்கள் மத்தியில் அறிமுகமானார். பிறகு நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது.
தொடர்ந்து சூது கவ்வும், ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா போன்ற படங்கள் தந்த வெற்றியால் முன்னணி நாயகனாக மாறினார். ஹீரோவாக, வில்லனாக, குணச்சித்திர நடிகராக எந்த கேரக்டர் என்றாலும் அதில் தன் தனி முத்திரையை பதித்து வருகிறார் நடிகர் விஜய் சேதுபதி.
இப்போது அவரது 50வது படம் மகாராஜா ரிலீஸ் ஆகி 3 நாட்களான நிலையில், ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை, ஆதரவை பெற்று இந்த ஆண்டின் சிறந்த படங்களில் ஒன்றாக மாறியிருக்கிறது. இந்த சூழலில், விஜய் சேதுபதியின் மகன் சூர்யாவும் நடிகராக பீனிக்ஸ் என்ற படத்தில் நாயகனாக அறிமுகமாகிறார். ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு இந்த படத்தை டைரக்ட் செய்கிறார்.
பீனிக்ஸ் படத்தின் துவக்க விழா பூஜையில் பங்கேற்ற விஜய் சேதுபதி மகன் சூர்யா, நான் விஜய் சேதுபதியின் மகன் என்ற அப்பாவின் அடையாளத்தை தவிர்த்துவிட்டு, சூர்யாவாக மட்டுமே நடிக்கப் போகிறேன். அப்பா வேற, நான் வேற என்ற ரீதியில் சூர்யா பேசியிருந்தார். மேலும், அந்த படத்தின் துவக்க விழா பூஜையிலும் விஜய் சேதுபதி கலந்துக்கொள்ளவில்லை.
ஆனால் நேற்று நடந்த பீனிக்ஸ் படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் படத்தின் நாயகன் சூர்யாவின் அப்பா நடிகர் விஜய் சேதுபதி, அம்மா மற்றும் குடும்பத்தினர் கலந்துக்கொண்டனர். அப்போது, ஏற்கனவே நடிகர்கள் சூர்யா, எஸ்ஜே சூர்யா, சூரி என்ற பெயர்களில் நடிகர்கள் உள்ள நிலையில், நீங்களும் சூர்யா என்ற பெயரில் நடித்தால் குழப்பம் வராதா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, நான் இந்த பெயரில் தான் நடிப்பேன். நீங்க விஜய் சேதுபதி மகன் சூர்யா என்றுதானே எழுதப்போறீங்க, அப்புறம் என்ன, என்று சமாளித்தார்.
மேலும், பீனிக்ஸ் படத்தின் துவக்க விழாவுக்கு அப்பா விஜய் சேதுபதி வரவில்லை. டிரெய்லர் வெளியீட்டு விழா பிரமோசனுக்கு மட்டும் அவர் வப்திருக்கிறாரே என்ற கேள்விக்கு பதிலளித்த சூர்யா, இன்று தந்தையர் தினம். அதனால் அவரை இந்த நிகழ்ச்சிக்கு அழைத்து அவருக்கு சர்ப்ரைஸ் கொடுத்தேன். அப்பாவுடன் அம்மா, என் சகோதரியும் இந்த நிகழ்ச்சிக்கு வந்துள்ளனர், என்று சூர்யா கூறினார்.





