தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. கடந்த ஆண்டில் அவரது 50வது படம் மகாராஜா வெளியாகி பெரிய வரவேற்பை வெற்றியை பெற்றது. கடந்தாண்டில் வெளியான தமிழ் படங்களில் ரூ. 100 கோடி வசூலை கடந்த 8 படங்களில் மகாராஜா படமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
அதே நேரத்தில் சீனாவிலும் வெளியான மகாராஜா படம் அங்கு ரூ. 90 கோடிக்கு மேல் வசூலை வாரிக் குவித்தது. நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான மகாராஜா படத்தை 2 கோடிக்கும் மேல் பார்வையாளர்கள் பார்த்ததால், அதிக எண்ணிக்கை பார்வையாளர்கள் பார்த்த படமாகவும் மகாராஜா படம் இருந்தது.
கடைசியாக வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த விடுதலை 2 படம் வெளியானது. ஆனால் விடுதலை முதல் பாகம் போல இந்த 2ம் பாகத்துக்கு பெரிய வரவேற்பு ரசிகர்களிடம் இல்லை. படம் முழுவதும் ஆர்ப்பாட்டம் போராட்டம் புரட்சி என இருந்ததால் ரசிகர்கள் இந்த படத்தை பெரிதாக ரசிக்கவில்லை.
இந்நிலையில் விஜய் சேதுபதி நடிப்பில் பாண்டிராஜன் இயக்கிய தலைவனும் தலைவியும் மற்றும் மிஷ்கின் இயக்கிய டிரெயின் அடுத்து ஏஸ் என்ற 3 படங்களும் அடுத்தடுத்து வெளியாக இருக்கின்றன. இதற்கிடையே நடிகர் விஜய் சேதுபதி பாலாஜி தரணிதரன் படத்தில் நடிப்பதற்காக உடல் எடையை பாதியாக குறைத்து ஸ்மார்ட் ஆக மாறியிருக்கிறார்.
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் விஜய் சேதுபதி கூறியதாவது, என்னுடைய உடல் எடை எவ்வளவு இருக்கிறது என்பதை விட நான் எந்த அளவுக்கு ஆரோக்கியமாக இருக்கிறேன் என்பதே முக்கியம். நான் உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தால் அதுவே என் உடல் எடை குறைப்பதற்கு போதுமான ஒன்று.
நான் எடை பார்க்கும் மிஷினை பயன்படுத்துவதே இல்லை. அதில் காட்டும் எண்கள் என்னை சோர்வடைய செய்து விடுகிறது. உடல் எடையை விட மனம் மற்றும் உடல் ஆரோக்கியமே முக்கியம் என அந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதி பேசியிருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மற்ற ஹீரோக்களை போல ஸ்மார்ட்டாக இல்லாமல் சற்று குண்டாக தொப்பையுடன் நடிகர் விஜய் சேதுபதி சில படங்களில் முன்பு காணப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.





