பொல்லாதவன் படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக வந்தவர் வெற்றிமாறன். தனுஷ் நடித்த இந்த படம் வெற்றிமாறனுக்கு மிகப்பெரிய வெற்றியை தந்தது. தொடர்ந்து ஆடுகளம் அசுரன் வடசென்னை விசாரணை விடுதலை விடுதலை 2 ஆகிய படங்களை இயக்கினார். அவர் இயக்கிய அனைத்து படங்களுமே சூப்பர் ஹிட் படங்களாக இருந்தன.
வெற்றிமாறன் இயக்கிய 7 படங்களில் 4 படங்களில் தனுஷ்தான் கதாநாயகனாக நடித்திருக்கிறார். 2 படங்களில் விஜய் சேதுபதி நாயகனாக நடித்திருக்கிறார். விசாரணை படத்தில் அட்டக்கத்தி தினேஷ் சமுத்திரக்கனி முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர். வெற்றிமாறனை பொருத்த வரை அவரது படங்களுக்கு ரசிகர்களிடம் தனி வரவேற்பு இருந்து வருகிறது.
முதலில் வடசென்னை படத்தை இயக்க வெற்றிமாறன் முடிவு செய்த போது அதில் அவர் கதாநாயகனாக தேர்வு செய்தது நடிகர் சிம்புவை தான். ஆனால் அவர் நடிக்க முடியாமல் போன நிலையில் அந்த படத்தில் நடிகர் தனுஷ் நடித்தார். வடசென்னை 2ம் பாகம் எடுக்கும் திட்டத்தில் வெற்றிமாறன் உள்ள நிலையில் அந்த படம் இன்னும் சில ஆண்டுகளுக்கு பிறகு துவங்க வாய்ப்புள்ளது.
விடுதலை படம் பெரிய வரவேற்பை வெற்றியை பெற்ற நிலையில் வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் விடுதலை 2 படம் ரசிகர்களிடம் பெரிய கவனத்தை பெறவில்லை. இதற்கு படத்தின் அதிகப்படியான நீளமும் ஒரு முக்கிய காரணமாக இருந்தது. விடுதலை 2 படத்தை தொடர்ந்து, இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் அரசன் என்ற படம் உருவாகிறது.
மணிரத்னம் இயக்கத்தில் தக்லைஃப் படத்தில் நடித்த பிறகு நடிகர் சிலம்பரசன் இப்போது அரசன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதியும் முக்கிய கேரக்டரில் நடிப்பதாக தகவல் வெளியானது. இதுகுறித்து சமீபத்தில் ஒரு விழாவில் பங்கேற்ற நடிகர் விஜய் சேதுபதி, அரசன் படத்தில் நடிப்பது குறித்து பேசியிருக்கிறார்.
அந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதி கூறியதாவது, அரசன் படத்தில் நான் நடிக்கும் என்னுடைய கதாபாத்திரம் பற்றி என்னவென்று எனக்கு இதுவரை தெரியாது. வெற்றிமாறன் சார் கதையை எழுதும்போது, அவர் எழுதிய கேரக்டருக்காக என்னை நினைவில் வைத்து எழுதியதாக சொன்னார். அவர் அப்படி சொன்ன உடனே நானும் நடிப்பதற்கு ஓகே சொல்லிவிட்டேன். எத்தனை நாட்கள் படப்பிடிப்பு இருக்கும் என்றும் எனக்குத் தெரியாது என்று விஜய்சேதுபதி வெளிப்படையாக கூறியிருக்கிறார்.





