நடிகர் விஜய் இப்போது அரசியல் களத்தில் குதித்திருக்கிறார். அவர் யாரை நம்பி போராட்ட களமான அரசியல் களத்தில் இறங்கியிருக்கிறார் அவரை விரும்பும் லட்சக்கணக்கான ரசிகர்களை நம்பியதால்தான். இதே போல் தான் 1970களில் எம்ஜிஆர் அரசியல் களத்தில் இறங்கினார். 2005ம் ஆண்டில் கேப்டன் விஜயகாந்த் அரசியல் களத்தில் குதித்தார்.
ஆனால் எம்ஜிஆர் விஜயகாந்த் போன்ற தன்னிகரற்ற கலைஞர்களை ரசிகர்கள் கைவிட வில்லை. ரசிகர்கள் எல்லாம் தொண்டர்களாக மாறி, ஓட்டுகளை அந்த தலைவர்களுக்கு தேர்தல்களில் பதிவு செய்ததால்தான் 3 முறை தமிழக முதல்வராக எம்ஜிஆர் ஆட்சி நடத்தினார். 2011ம் ஆண்டில் எதிர்கட்சி தலைவராக தமிழக சட்டசபையில் கேப்டன் விஜயகாந்த் அமர்ந்தார்.
இப்போது தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவராக களத்தில் நிற்கும் விஜய்க்கு மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பு ஆதரவு இருக்கிறது. கடந்தாண்டில் அவர் நடத்திய முதல் அரசியல் மாநாடே அதற்கு சாட்சியாக இருக்கிறது. அதனால் மற்ற அரசியல் தலைவர்கள் விஜய் மீது பயங்கர காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
ஆனால் நடிகர் விஜய் சேதுபதி போன்ற ஒரு சில நடிகர்கள், ரசிகர்களை வேறு கோணத்தில் பார்க்கின்றனர். என் படம் பிடித்திருக்கிறதா, பார்த்து ரசியுங்கள் அதற்கு மேல் நீங்கள் எதுவுமே எனக்கு செய்ய வேண்டாம் என்ற மனநிலையில்தான் உள்ளனர். ஒரு ரசிகனின் எல்லை படம் பார்ப்பதோடு முடிந்து விடுவதாக விஜய் சேதுபதி போன்றவர்களின் எண்ணம் இருக்கிறது.
இதுகுறித்து நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் விஜய் சேதுபதி கூறியதாவது, எனக்கு ரசிகர் மன்றங்கள் இருக்கு. நான் இல்லேன்னு சொல்லலே. ஆனா அதில் ஒண்ணு கூட நான் சரின்னு சொல்லி ஓகேன்னு சொல்லி ஆரம்பிக்கப்படலே. என் கூட பிறந்த சகோதரனோ என் பிள்ளையோ இப்படி இன்னொருத்தருக்காக கோஷம் போடறதை நான் விரும்பலே.
அதே மாதிரிதான் ரசிகர்களும். என் வீட்டுல பொறந்தவங்க மட்டும் உசத்தி, நீங்க மட்டும் என்ன கம்மியா? இதெல்லாம் எனக்கு வேண்டாம். என் படத்தை வாங்குனவங்க வியாபாரம் பண்றவங்க எனக்கு போஸ்டர் அடிச்சுப்பாங்க. தயவு செய்து அது உங்க வேலை இல்லை. யங்க்ஸ்டர் என்பது பவர்புல். அவங்க ஒரு நடிகனுக்காக கொடி பிடிக்கறதுல கோஷம் போடறதுல எனக்கு உடன்பாடே இல்லை என்று விஜய் சேதுபதி பல ஆண்டுகளுக்கு முன் ஒரு நேர்காணலில் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.





