ஒரு இயக்குனர்தான் படத்தின் ஆணிவேராக இருக்கிறார். தயாரிப்பாளர்தான் படத்தின் முதுகெலும்பாக இருக்கிறார். இவர்களது பலத்த கூட்டணியில்தான் ஒரு படம் உருவாகிறது. அத்துடன் இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், கதாநாயகன் கைகோர்க்கும் போது அந்த படம் சிறப்பாக உருவாகி, ரசிகர்களுக்கு விருந்து படைக்கிறது.
சமீபத்தில் வெளியான படம் மழை பிடிக்காத மனிதன். இந்த டைட்டிலே பலரது கவனத்தையும் ஈர்த்தது. ஏனெனில் வழக்கமாக ஹீரோவின் பெயரை படத்தின் டைட்டிலாக வைக்கும் இன்றைய தமிழ் சினிமாவில் இதுபோன்ற வித்யாசமான, வசீகரிக்கும் தலைப்பு வைக்க இயக்குனர்கள் முன்வருவது சாதாரண விஷயம் அல்ல.
அந்த வகையில் மழை பிடிக்காத மனிதன் தலைப்பிலேயே, ரசிகர்களை கவர்ந்து விட்டார் இயக்குனர் விஜய் மில்டன். படம் வெளியான பிறகு, படத்தின் துவக்கத்தில் வரும் ஒரு நிமிட காட்சி, எனக்கு தெரியாமல் வந்துள்ளது. அதனால் ரசிகர்கள் அதை ஏற்க வேண்டாம். அதை மறந்துவிட்டு படம் பாருங்கள் என்று பேசி, இரண்டு தினங்களுக்கு முன் படத்தின் இயக்குனர் விஜய் மில்டன் வீடியோ வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
மழை பிடிக்காத மனிதன் படத்தில் ஹீரோ நல்லவனா, கெட்டவனா, ரவுடியா, அடியாளா, டாக்டரா, எங்கிருந்து வருகிறான் போன்ற விஷயங்களை சொல்லாமல் சஸ்பென்ஸாக கதையை வைத்திருந்த நிலையில், எனக்கே தெரியாமல் அந்த ஒரு நிமிட காட்சியை காட்டி படத்தின் த்ரில் மற்றும் சஸ்பென்ஸை இல்லாமல் செய்துவிட்டதாகவும் அவர் அந்த வீடியோவில் கூறியிருந்தார்.
இப்போது மீண்டும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள மழை பிடிக்காத மனிதன் படத்தின் இயக்குனர் விஜய் மில்டன், இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. எந்தெந்த விஷயங்கள் ரசிகர்களுக்கு பிடிக்கும் என்று நினைத்தோமோ, அந்த காட்சிகளை ரசிகர்கள் ரசித்து கூறி வருகின்றனர். இந்த படத்தை உருவாக்க நாங்கள் காட்டிய அக்கறை வீண்போகவில்லை.
படத்தில் அந்த சர்ச்சைக்குரிய ஒரு நிமிட காட்சி நீக்கப்பட்டு விட்டது. இந்த பிரச்னையை நடிகர் சரத்குமார் தலையிட்டு சுமூகமாக பேசி இந்த விஷயத்தில் எனக்கும் தயாரிப்பாளருக்கும் இருந்த பிரச்னையை முடித்து வைத்துவிட்டார். அதனால் அவருக்கு தனிப்பட்ட முறையில் நான் நன்றி சொல்லிக் கொள்கிறேன். இந்த படத்தை எல்லோரும் தியேட்டரில் வந்து பாருங்கள், என்று விஜய் மில்டன் அந்த வீடியோவில் கூறியிருக்கிறார்.





